பெப்ரவரி 4ஆம் தினமாகிய நாளைய தினம் எமது நாட்டின் 68வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாட இருக்கின்றோம். இவ்வேளையில் எமது மக்களின் மனங்களில் பாரிய தெளிவான மாற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் நாம் நினைவு கூரும் சுதந்திர தினம் அர்த்தமுள்ளதாக அமையும்.
இலங்கை பல நூற்றாண்டு காலம் அந்நியர்களால் ஆளப்பட்ட நாடு. இது நமது மூதாதையர்களுக்கும், நாட்டின் மக்களில் பாதிப்பேருக்கும் மட்டுமே தெரிந்த உண்மை. இளம் சமூகம் இதனை எத்தனை தூரம் புரிந்து வைத்திருக்கின்றதுஎன்பது கேள்விக்குறி. எமது நாடு அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெற்று 68 வருடங்களாகின்றன. நாளைய கொண்டாட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரையும் சேர்த்துக் கொள்வதற்கு அரசு திடசங்கற்பம் பூண்டுள்ளது வரவேற்கத்தக்கது.
நாம் 1948ம் ஆண்டு நம்மை ஆண்ட பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றோம். பல்லின மக்கள் வாழ்ந்த இந்த நாடடில் அனைத்து இனமக்களும் இணைந்தே சுதந்திரத்தைப் பெற்றனர். சுதந்திரம் பெற உழைத்தோர் யார் என்பதை எமது இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்.
இது ஊடகங்களின் பொறுப்பாகும். சுதந்திர வீரர்கள் குறிப்பாக நாட்டின் சுதந்திரத்திற்காக இனம், மதம் என்ற பாகுபாடு இன்றி ‘நாடு’ என்றே ஒரே குரல் எழுப்பினார்கள். அவர்களின் ஒற்றுமையை இன்றைய பரம்பரை தெளிவாக அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும். இது ஊடகங்களின் தார்மிகப் பொறுப்பு. அப்பொழுதுதான் இனங்களின் ஒற்றுமையை நாடறியச் செய்ய முடியும். சந்தேகங்கள் களையப்பட வாய்ப்பு ஏற்படும்.
சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் டி. எஸ். சேனநாயக்க அவர்களின் குரல் வானொலியில் ஒலிக்கும் போது அவரின் அந்த உருக்கமான செய்தி அனைத்து உள்ளங்களையும் பூரிப்படையச் செய்தது. அதே போன்று சுதந்திர வீரர்களின் குரல் ஒலிக்கச் செய்யாவிட்டாலும், அச்சு ஊடகங்கள் அந்த வீரர்களின் தியாகம் பற்றி இக்காலப் பகுதியில் இளம் உள்ளங்களில் பதிவு செய்ய வேண்டும். அது அச்சு ஊடகங்களின் தலையாய பொறுப்பாகும்.
சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் டி. எஸ். முதல் இன்று வரை பன்னிரண்டு பேர் நம் நாட்டுக்குத் தலைமை வகித்து இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளனர். இவர்களின் எதிர்பார்ப்பு ஒற்றை ஆட்சிக்குள் இணக்கப்பாடு காண்பதாகும்.
இதனைச் செய்வதற்கு இலங்கையின் சரித்திரப் பின்னணியை எந்த ஒரு இருட்டடிப்பும் இல்லாமல் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இளம் சமூகத்தினருக்கு கோடிட்டுக் காட்ட வேண்டும். அப்போது தான் இனவாதம், மதவாதம், மொழிவாதம் ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கையைக் கட்டி எழுப்ப முடியும்.
கடந்த காலவரலாற்றை நாம் மறந்து விடலாகாது. சுதந்திர இலங்கைக்குள் 1970 காலப் பகுதிகளில் ஒரு விதமான போராட்டம். 1982 களில் மற்றுமொருவிதமான போராட்டம், இதனால் நடந்தது என்ன? யார் பயன் பெற்றார்கள்? நாட்டின் முன்னேற்றம் பல்லாண்டு காலங்கள் பின் தள்ளப்பட்டது.
பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க வேண்டும். வளமான நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டும். சுதந்திர இந்தியாவிற்கும் எமக்கும் இடையில் வெறும் 6 மாதங்களே வித்தியாசம். எமது சுதந்திரத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் சுதந்திரம் பெற்ற இந்தியாவின் வளர்ச்சி வியக்க வைக்கிறது. அவர்களின் வெற்றி வானைத் தொட்டு விட்டது.
சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர், வேடுவர் என்ற கோட்பாடுகளை ஒரு புறம் தள்ளி விட்டு நாம் அனைவரும் ‘இலங்கையர்’ என்ற கோட்பாடுக்குள் வரும் வரை நாம் பெற்ற சுதந்திரம் அர்த்தமுள்ளதாக முடியாது.
68வது சுதந்திர தினத்தை நாம் அனைவரும் இலங்கையர் என்ற தூய சிந்தனையுடன் நாளை கொண்டாடுவோம். எதிர்கால இளம் சமூகத்திற்கு நல்லதோர் நாட்டை முன்வைப்போம்.