23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

பாதுகாக்கப்பட்ட திஸ்ஸமஹாராம சந்தகிரி சாயாவை ஜனாதிபதி திறந்து வைத்தார்………

President 200தொல்பொருள் பாதுகாப்பு தொடர்பாக அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தினை முறையாகவும் செயற்திறனாகவும் முன்கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பாதுகாக்கப்பட்ட திஸ்ஸமஹாராம வரலாற்று பிரசித்திபெற்ற சந்தகிரி சாயாவை மக்களின் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறந்து வைப்பதற்கான புண்ணிய வைபவம் இன்று (30) முற்பகல் இடம்பெற்ற போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

இன்று மேற்குலக நாட்டு மக்கள்கூட ஆன்மீகத்தை நாடி பௌத்த சிந்தனைகள்மீது ஆர்வம் காட்டுகின்றனர் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், நாம் பௌத்த சிந்தனைகளை அடிப்படையாகக்கொண்ட  சிரேஷ்டமானதொரு வரலாற்று சூழலில் வாழ்ந்த இனம் என்பதனை உலக மக்களுக்கு பறைசாற்றுவதற்காக எமது மரபுரிமைகள் போற்றிப் பாதுகாக்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

சந்தகிரி சாயா உள்ளிட்ட தொல்பொருள் பாதுகாப்பு தொடர்பான துரித வேலைத்திட்டமொன்றை தயாரித்து பிரதேசத்திற்கு தேவையான ஓர் அரும்பொருட் காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் இங்கு யோசனை முன்வைத்தார்.

அநுராதபுர காலத்திற்குட்பட்ட திஸ்ஸமஹாராம சந்தகிரி தூபியானது வரலாற்று மற்றும் கட்டிடக் கலைத்துறையில் மிக முக்கியம் வாய்ந்த ஒரு தூபி என்பதுடன் மத்திய கலாசார நிதியத்தினால் தென் பிராந்திய சுற்றுலா கருத்திட்டத்தில் ஓர் அங்கமாக பாதுகாக்கப்பட்டுள்ளது.

திஸ்ஸமஹாராம விகாரைக்கு பின்னால் சுமார் 200 மீற்றர் தொலைவில் இத்தூபி அமைய பெற்றுள்ளது.

பாதுகாக்கப்பட்ட சந்தகிரி சாயா தூபியின் நினைவுப்பேழையை திரைநீக்கம் செய்து அதனைத் திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், முதலாவது மலர்பூஜை வழிபாட்டில் ஈடுபட்டார்.

திஸ்ஸமஹாராம சந்தகிரி உபய ரஜமகா விகாராதிபதி மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களின் சங்க நாயக்கர் கலாநிதி வண. தேவாலேகம தம்மசேன தேரர் அவர்களை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், அன்னாரின் நலன் விசாரித்து, குறுகிய நேரம் உரையாடினார்.

பின்னர் வரலாற்று பிரசித்திபெற்ற அரும்பொருட்கள் மற்றும்  ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.

அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச, அகில விராஜ் காரியவசம், மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பிரிசாந்த குணவர்தன, முன்னாள் தொல்பொருள் ஆணையாளர் கலாநிதி ரோலன்ட் த சில்வா ஆகியோரும் பிரதேசவாழ் பெருந்தொகையான மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

4

5

6

7

8

10

1

2

3