23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

வெற்றிலை சின்னத்தில் சு.க போட்டியிடும்

sbdisanayake 20012016 kaa cmyமுன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் சகலரையும் ஒன்றிணைத்து ஐ.ம.சு.முவின் வெற்றிலைச் சின்னத்திலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சு.க போட்டியிடுமென அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

சு.கவில் பிளவை ஏற்படுத்தினால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் சு.கவில் உள்ளவர்களுக்கும், இடதுசாரிக் கட்சிகளுக்கும் நன்றாகத் தெரியும் என்றும் அவர் கூறினார்.

சுதந்திரக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றபோதும், உள்ளூராட்சி சபைகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையானவர்கள் சு.க பிளவு படக்கூடாது, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் முற்போக்கு சக்திகளை ஒன்றிணைத்து பாரிய கூட்டணியொன்றில் பலமாக களமிறங்கவேண்டும் என்ற நிலைபாட்டில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று(20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போகலாம் என்ற அச்சத்தில் உள்ள ஒரு சிலர் ஒன்றுகூடி புதிய கட்சி ஆரம்பிக்கப்படப்போவதாக ஊடக சந்திப்புக்களை நடத்தி வருகின்றனர். இருந்தபோதும் அதிக எண்ணிக்கையான உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கட்சி பிளவுபடக்கூடாது, ஒன்றிணைந்து இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். அதேநேரம், தொடர்ந்தும் சுதந்திரக் கட்சியிலேயே தான் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறிவருகிறார்.

கடந்த காலத்திலும் சுதந்திரக் கட்சியை விட்டு விலகிச்சென்ற பலர் தாம் சென்ற பாதை பிழையென்பதை உணர்ந்து மீண்டும் சு.கவில் இணைந்துகொண்டமை வரலாறு. அது மட்டுமன்றி கட்சி பிளவுபட்டால் தேர்தலில் ஏற்படக்கூடிய விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பது சு.கவைச் சேர்ந்தவர்களுக்கும், இடதுசாரிக் கட்சிகளுக்கும் நன்கு தெரியும். இது தொடர்பில் அவர்களுக்கு கடந்த காலம் குறித்த சிறந்த அனுபவம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிச் சென்ற வாக்குகளை மீளவும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சக்தி பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே, கட்சி பிளவு பட்டால் அது அளிவு, ஒன்று பட்டால் வெற்றி எனக் கூறியதுடன், கட்சியை பிளவுபடுத்துவதால் யாருக்கு நன்மை ஏற்படப்போகின்றது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். சு.கவுக்குள் காணப்படும் பிரச்சினைகள் வெளியில் எடுத்துச் செல்லப்படாமல் கட்சிக்குள்ளேயே பேசித் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

புதிய கட்சி ஆரம்பிக்கப்படவேண்டும் என வேட்பாளர்களும், வேட்பாளராக விரும்பும் சிலரும் மாத்திரமே கூறி வருகின்றபோதும் அடிமட்ட மக்கள் மத்தியில் கட்சி பிளவுபடக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே பலர் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேல்மாகாண சபை முதலமைச்சரும் கலந்துகொண்டிருந்தார்.