19042025Sat
Last update:Tue, 07 Jan 2025

அனுமதியின்றி உடல் உறுப்பு மாற்ற தடை

colkidneys wwwinteractive biologycom173300286 3946722 20012016 ssa cmyஇந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான சிறுநீரக மாற்று மோசடி குறித்த புதிய விசாரணைகளை சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தி அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் திணைக்களத்துக்கு அமைச்சு பணிப்புரை விடுத்திருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரம தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெறுவதாகக் கூறப்படும் இந்த மோசடியைத் தடுப்பதற்கான தற்காலிக நடவடிக்கையாக சுகாதார அமைச்சின் அனுமதி பெறாமல் எந்தவொரு உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சை செய்வதாயின் சுகாதார அமைச்சில் முன் அனுமதி பெறுவது அவசியம்.

உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சை தொடர்பில் உத்தியோகபூர்வமான முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு எதிர்பார்த்திருப்பதாகவும், அதுவரையான காலப் பகுதியில் குறிப்பாக வெளிநாட்டவர்களுக்கு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்வது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சட்டவிரோதமான சிறுநீரக மாற்றுச் சிகிச்சைஇடம்பெறுவதாக இரண்டாவது தடவையாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2014ஆம் திகதி இது விடயம் தொடர்பாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களுக்கு அமைய சுகாதார அமைச்சு விசாரணைகளை நடத்தியிருந்தது.

இந்த நிலையில், மீண்டும் சட்டவிரோத சிறுநீரக மாற்றுச் சிகிச்சை இடம்பெறுவதாக இந்திய ஊடகங்கள் இந்தவாரம் செய்தி வெளியிட்டிருந்தன. இலங்கையைச் சேர்ந்த நான்கு வைத்தியசாலைகளைச் சேர்ந்த ஆறு வைத்தியர்கள் இதில் தொடர்புபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இலங்கையில் உள்ள நான்கு வைத்தியசாலைகளில் இவ்வாறான சட்டவிரோத சிறுநீரக மாற்று சிகிச்சை இடம்பெறுவதாகவும், சிறுநீரகம் வழங்குபவர்கள் மற்றும் அதனைப் பெறுபவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மோசடிக்கு முக்கியமான நபரான அஹமதாபாத்தைச் சேர்ந்த சுரேஷ் பிரஜாபதி என்ற நபர் செவ்வாய்க்கிழமை இந்தியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த மோசடிக்கு இந்தியா ரூபாயில் 28 இலட்சம் முதல் 30 இலட்சம் வரை அறிவிடப்படுவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மோசடியின் பிரதான நபராக செயற்படும் சுரேஷ் பிரஜாபதி என்பவர் தனக்கு 5 இலட்சம் ரூபாவை வைத்துக்கொண்டு எஞ்சிய பணத்தை வைத்தியசாலைக்கு வழங்குவதாகக் கூறியுள்ளார். இந்த மோசடி மூலம் அவர் 3 கோடி இந்திய ரூபாய்களை ஈட்டியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த ஆறு வைத்தியர்களுக்கு எதிராக இந்தியப் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருப்பதாகவும், இந்த வைத்தியர்கள் 60ற்கும் அதிகமான சட்டவிரோத சிறுநீரக மாற்றுச் சிகிச்சையை மேற்கொண்டிருப்பதாகவும் இந்து பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுரேஷ் பிரஜாபதி என்ற முக்கிய நபருடன் அவருக்கு உதவியாக இருந்த பிறிதொரு நபரும் இந்தியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

சிறுநீரகம் செயலிழந்த நோயாளர்களுக்கு டெல்லி, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக சிறுநீரகங்களை பெற்ற சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் தெலுங்கானாவை சேர்ந்த வைத்தியர் மற்றும் அவரது உதவியாளர்கள் உள்ளிட்ட பலரை, தெலுங்கானா குற்றப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.