புகையிலை மற்றும் மதுபானம் மூலம் வருடாந்தம் அரசாங்கத்துக்கு 120 பில்லியன் ரூபா வருமானமாக கிடைத்த போதும் அதன் சீரழிவுகளிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்கும் செயற்பாடுகளில் பின்னிற்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மது மற்றும் புகையிலை ஒழிப்பு நடவடிக்கையில் சகல அரச நிறுவனங்களிலும் தனியான பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு அந்தந்த நிறுவனங்களில் முதலில் இத்திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மதுவிலிருந்து விடுதலை பெற்ற நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப அனைவரதும் பங்களிப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு என்ற போதை ஒழிப்பு தேசிய திட்டத்தின் 5 ஆவது நிகழ்வு நேற்று மஹரகம இளைஞர் சேவைகள் மன்ற கட்டடத்தில் நடைபெற்றது. அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உட்பட அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பெருமளவிலான மாணவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
கடந்த மூன்று வருடங்களுக்கு முன் போதை தடுப்பு தேசிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதனைப் பலப்படுத்தும் வகையில் கடந்த வருடம் இது தொடர்பான ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்விடயத்தோடு சம்பந்தப்பட்ட சகல நிறுவனங்கள், பொலிஸ் துறை, கலால் வரி திணைக்களம், அமைச்சுக்களை ஒன்றிணைந்துக் கொண்டு இச் செயலணியின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாவட்ட, பிரதேச ரீதியிலும் பாடசாலை மாணவர்கள் மற்றும் சமூகங்கள் மத்தியிலும் நாம் செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
கடந்த சில மாதங்களாக நாம் நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இதன் மூலமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இம்முறை கொழும்பு மாவட்டத்தில் இதனைச் செயற்படுத்துகின்றோம்.
புகையிலை, சிகரட் மற்றும் மதுபானம் எமது நாட்டில் மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்திலும் பெரும் சவாலாக உள்ளது. சட்டபூர்வமான அனுமதியுடனும் சட்டவிரோதமாகவும் இதன் விற்பனைகள் இடம்பெறுகின்றன.
போதை ஒழிப்பு, கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் போதிலும் சட்டபூர்வமாக இதன் விற்பனைக்கு அரசாங்கங்கள் அனுமதி வழங்கியும் உள்ளன. இது மிக மோசமான சமூக பிரச்சினையாகவும் சவாலாகவும் மாறியுள்ளது. ஒருபுறம் நாம் இவற்றைக் கட்டுப்படுத்த முயற்சிக்கையில் மறுபுறம் இது சிலரது தேவையாகிறது.
உலகின் பல நாடுகளில் தேசிய வருமானத்தில் பெரும் பங்கினை வகிக்கும் பொருட்களாக மதுபானம் மற்றும் புகையிலை உள்ளது.
எமது நாட்டில் அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருடாந்த வருமானத்தில் சிகரட் மூலம் 55 பில்லியன் ரூபாவும் மதுபானம் மூலம் 65 பில்லியன் ரூபாவும் திறைசேரிக்குக் கிடைக்கின்றது.
வரவு செலவு திட்டத்தை ஈடுசெய்வதற்கு இதன் மூலம் சுமார் 120 பில்லியன் ரூபா கிடைப்பதைக் குறிப்பிட வேண்டும்.
அரசாங்கம் என்ற ரீதியில் நாம் இதற்கு முக்கியத்துவமளிக்காது சமூக நலனையே கருத்திற் கொண்டுள்ளோம்.
இலங்கையிலேயே கொழும்பு மாவட்டத்தில் தான் மதுபான பாவனை அதிகரிப்பும் அதனால் எழும் பிரச்சினைகளும் அதிகமாக காணப்படுகின்றன.
இலங்கையிலுள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளை விட கொழும்பு பிரதேச செயலகப் பிரிவிலேயே ஹெரோயின் பாவனை அதிகமாகக் காணப்படுகிறது. கொழும்பு பிரதேச செயலகப் பிரிவிலுள்ளவர்களில் 3 வீதமானோர் கஞ்சா உபயோகிப்பவர்கள். இது தொடர்பில் மோசமான தகவல்கள் கிடைக்கின்றன.
போதை ஒழிப்பு திட்டத்தின் மூலமும் சம்பந்தப்பட்ட சுற்று் நிருபத்தின் மூலமும் நாம் எதிர்பார்ப்பது பாடசாலை மாணவர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் இதன் பாதிப்புகள் தொடர்பில் தெளிவூட்டுவதே. இது தொடர்பான குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடி மீளாய்வுகளை மேற்கொள்வது பற்றியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தினை முறையாக முன்னெடுப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடைவதுடன் குடும்பங்களில் பொருளாதாரமும் அதிகரிக்கும்.
நாட்டில் 14,000 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவுகளிலும் இரண்டு இலட்சம் ரூபாவுக்கு சிகரட் விற்பனை இடம்பெறுகிறது.
2016 ல் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்குவதற்காக 37 பில். ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. மேற்படி சிகரட் விற்பனை மூலமான வருமானம் இதற்கு சமமானது.
அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க அரச தேசிய வருமானத்தில் மூன்றில் இரண்டு வீதம் செலவாகிறது.