இலங்கையிலுள்ள அனைத்து தொலைபேசி வலையமைப்பிற்கும் பொதுவான அழைப்புக் கட்டணமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் குறித்த கட்டணங்களை அமுல்படுத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபான்கொட தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் ஒரே வலையமைப்பிற்கான அழைப்புக்கட்டணம் 50% ஆக அதிகரிக்கப்பட்டு நிமிடத்திற்கு (ரூபா 1.00 இலிருந்து ரூபா 1.50 ஆகவும்) ஏனைய வலையமைப்பிற்கான கட்டணங்கள் 28% இனால் குறைக்கப்பட்டு (ரூபா 2.00 இலிருந்து ரூபா 1.80 ஆகவும்) மாற்றமடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, SMS கட்டணம் ரூபா. 0.20 ஆக மாற்றமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி வலையமைப்பினர் மேற்கொண்ட வேண்டுகோளுக்கு இணங்க, குறிப்பாக குறைந்த வாடிக்கையாளர்களைக் கொண்ட வலையமைப்பினர் இதன் மூலம் ஏனைய வலையமைப்பினருடன் போட்டியிட முடியும் என இந்திரஜித் மேலும் தெரிவித்தார்.
தற்போது இலங்கையில் 5 பிரதான தொலைபேசி வலையமைப்பு சேவை வழங்குனர்கள் காணப்படுவதோடு, டயலொக் மற்றும் மொபிடெல் வலையமைப்பினரே மூன்றில் இரண்டு பங்கு வாடிக்கையாளர்களை தம் வசம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாரதி எயார்டெல், துபாயின் எடிசலாற், ஹட்சிசன் நிறுவன ஹட்ச் ஆகியன இலங்கையில் இயங்கும் ஏனைய வலையமைப்புகளாகும்.