16072024Tue
Last update:Wed, 08 May 2024

மக்கள் மத்தியில் சமாதானத்தை கட்டியெழுப்ப சட்டத்தால் மட்டும் முடியாது!

02 11 18Janநாட்டு மக்களிடம் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு சட்டத்தினால் மட்டும் முடியாது என்றும் அதனை சமய தத்துவங்களுக்கேற்பவே மேற்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டிலுள்ள சகல இனங்களுக்கு மத்தியிலும் அச்சம், சந்தேகத்தை இல்லாதொழித்து சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் ஆரம்பித்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முன்வருமாறு தாம் சகல சமயத் தலைவர்களிடமும் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்தார்.

களுத்துறை பயாகலை இந்து கல்லூரியில் நேற்று (18) நடைபெற்ற 2016 ஆம் ஆண்டு தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதற்கு சமய மற்றும் கலாசார நடவடிக்கைகளைப் பயன்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

கல்லூரிக்குச் சென்ற ஜனாதிபதியை கல்லூரி மாணவர்கள் இந்து பாரம்பரியங்களுடன் வரவேற்று கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்புகின்ற போது இனம், மதம் என்ற பேதங்கள் தடையாக அமையக்கூடாது என்றும் நாட்டிலுள்ள எல்லா இனத்தவர்களும் சமாதானத்துடனும் ஐக்கியத்துடனும் வாழ்வதைக் காண்பதே தமது நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு அரசியல்வாதிகளைப் பார்க்கிலும் சமயத் தலைவர்களுக்கு முக்கிய பங்குண்டு என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டங்களைப் பலப்படுத்தி மீண்டும் நாட்டில் ஒரு யுத்தம் ஏற்படாதவகையில் அடித்தளத்தை அமைக்க ஒன்றிணையுமாறு மகா சங்கத்தினர் உள்ளிட்ட இந்து, கத்தோலிக்க, இஸ்லாம் சமயங்களின் சமயத் தலைவர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மஹிந்த சமரசிங்க, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.