யாழ் மாநகரம் தந்திரோபாய நகர அபிவிருத்தி திட்டங்களின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான முதற்கட்ட கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூட்டத்தில் உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் நேற்று(18) நடைபெற்றது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் நகர அபிவிருத்தி அமைச்சினால் இந்நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
உலக வங்கியின் நிதியுதவியில் எதிர்வரும் காலங்களில் யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த தந்திரோபாய நகர அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
போக்குவரத்து பிரச்சனை, வடிகால்கள் மற்றும் குளங்கள் புனரமைப்பு வெள்ள அபாயத்தை தடுக்கும் திட்டம் மற்றும் பொது மக்களிற்கான அதிக அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் இதன்மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன.
இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் செந்தில்நந்தனன், உலக வங்கியின் அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகாரசபை உயர் அதிகாரிகள், தந்திரோபாய நகர திட்டமிடலாளர்கள், சிவில் சமூகத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னெடுக்கப்படவுள்ள யாழ்ப்பாண நகர திட்டமிடல் தொடர்பாக இக்கலந்துரையாடலில் துறைசார் நிபுணர்கள், அதிகாரிகளிடம் கருத்துக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டது.