16072024Tue
Last update:Wed, 08 May 2024

அரசியல் சந்தர்ப்பவாதிகளின் விமர்சனங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பதை விடுத்து நாட்டுக்கான பொறுப்புக்களை நிறைவேற்றுவதே எம்முன் உள்ள பணியாகும் – ஜனாதிபதி

3 5நாட்டில் எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும் புதிய அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு இன்று முழு உலகினதும் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசியல் சந்தர்ப்பவாதிகளின் விமர்சனங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பதை விடுத்து நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நாம் ஏற்றுக்கொண்ட பணிகளை உரிய முறையில் நிறைவேற்றுவதே இன்று நாம் செய்ய வேண்டிய பணியாகும்  என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று (17) முற்பகல் பொலன்னறுவை மாவட்ட வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வகையில் பொலன்னறுவை நகரின் சுற்றுவட்டவீதி நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘பிபிதெமு பொலன்னறுவ’ ஐந்துவருட மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, இன்று இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு சர்வதேச மட்டத்தில் பெரும் போட்டி நிலவுவதாகவும் இலங்கை அரசாங்கத்தின் சிறந்த அரச நிருவாகம் இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமது அரசாங்கம் பின்பற்றும் சரியான வெளிநாட்டுக் கொள்கை காரணமாக இன்று சகல நாடுகளினதும் கவனம் இலங்கையை நோக்கித் திரும்பியுள்ளதாகக் குற்பிட்ட ஜனாதிபதி, 42 வருடங்களின் பின்னர் ஜேர்மனி நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றுக்கு  இந்த நாட்டு அரச தலைவர் ஒருவருக்கு முதன்முறையாக அழைப்பு விடுக்கப்பட்டதை நினைவுகூறும் வகையில் அடுத்த மாதம் ஜேர்மனிக்கு ஒரு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளுமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் உலகின் அபிவிருத்தி அடைந்த பல நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளுமாறு அழைப்பு கிடைத்துள்ளதாகவும் கடந்த வருடத்தைப் போன்று இவ்வருடமும் அந்த எல்லா அழைப்புகளும் தமது கோரிக்கையின் பேரிலன்றி அந்த நாடுகளின் அரச தலைவர்களுடனான நட்புறவின் அடிப்படையிலே கிடைத்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அந்த எல்லா நட்பு நாடுகளினதும் உதவியுடன் 2016 ஆம் ஆண்டு இலங்கையின் அபிவிருத்தித் துறையில் ஒரு முக்கிய ஆண்டாக இருக்கும் என்பதோடு, பல்வேறு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அபிவிருத்தி என்பது எந்தவொரு மாவட்டத்தையும் மையப்படுத்தியதாக அன்றி அது நியாயமாகவும் சமநிலைத்தன்மையுடனும் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும் என்றும் அபிவிருத்தியை நியாயமானமுறையில் எல்லோருக்கும் கொண்டு சேர்ப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டின் ஏனைய மாவட்டங்களில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றபோது பொலன்னறுவை மாவட்டத்திலும் அதற்குச் சமாந்தரமாக அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவது அந்த மக்களின் பிரதிநிதி என்றவகையில் தமது பொறுப்பாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தாம் அன்று பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்த சந்தர்ப்பத்தில் பொலன்னறுவை மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக்கோரி நூற்றுக்கணக்கான கடிதங்களை எழுதியதாகவும் அன்றிலிருந்து அம்மக்களுக்கு இடம்பெற்றுவரும் அநீதிகளுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு தாம் அர்ப்பணத்தோடு உள்ளதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, இராஜாங்க அமைச்சர் திலான் பெரேரா, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சிறிபால கம்லத், நாலக்க கொலொன்னே ஆகியோர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிரதேச வாசிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

4

5

6

8

10

2