நல்லிணக்க செயற்பாடு: அமைச்சரவைக்கு பிரதமர் அறிக்கை சமர்ப்பிப்பு
நல்லிணக்க செயற்பாடுகளை ஒருங்கிணைப்பு செய்வதற்காக நல்லிணக்க பொறிமுறை ஒருங்கிணைப்பு செயலகம் ஒன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனூடாக நல்லிணக்க செயற்பாடுகள் அதனுடன் தொடர்புள்ள தீர்மானங்கள், திட்டங்கள் என்பவற்றை செயற்திறனுடன் முன்னெடுக்கவும் காணாமல் போனோர் தொடர்பான செயலகம், உண்மை, நல்லிணக்கம் மற்றும் மீண்டும் மோதல்கள் ஏற்படுவதை தடுக்கும் ஆணைக்குழு போன்ற நல்லிணக்க பொறிமுறைகளை உருவாக்கவும் திட்டங்கள் அமைக்கவும் இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் மோதல்கள் முடிவடைந்த பின்னர் நல்லிணக்கம் மற்றும் நிரந்தர சமாதானம் ஏற்படுத்த பொன்னான சந்தர்ப்பம் ஏற்பட்டது. பல்வேறு காரணங்களால் அது கைநழுவியது. இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை காலங்கடத்தாது முன்னெடுக்க வேண்டியுள்ளது.
அமைச்சுக்கள் மற்றும் அரசாங்க பல்வேறு நிறுவனங்கள் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றன. இவற்றை ஒன்றிணைக்க பொதுவான நிறுவனமொன்று இல்லாத காரணத்தினால் முடிவுகள் மற்றும் திட்டங்களை செயற்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புள்ள தீர்மானங்கள், திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை செயற்திறனுடன் முன்னெடுக்க பொறுப்பு வாய்ந்த, நல்லிணக்க பொறிமுறைகளை கூட்டிணைப்பதற்காக செயலகம் ஒன்றை (Secretariat for Coordinating the Reconcillation Mechanisms – SCRM) உடனடியாக ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்பித்தார்.
இந்த செயலகத்தினூடாக நல்லிணக்கம் தொடர்பாக தேசிய மட்டத்தில் கலந்துரையாடல் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
காணாமல் போனோர் தொடர்பான செயலகம் உண்மை, நல்லிணக்கம், மற்றும் மீண்டும் மோதல் ஏற்படுவதை தடுக்கும் ஆணைக்குழு போன்ற நல்லிணக்க பொறிமுறைகளை ஸ்தாபிப்பதற்காக கால எல்லைகளுடன் கூடிய திட்டமொன்றை தயாரிக்கவும் இதனூடாக ஒழுங்கு செய்யப்படும்.
மனித உரிமை ஆணைக்குழு அடங்கலாக தேசிய நிறுவனங்களுடன் மனித உரிமை தொடர்பான ஐ.நா. ஆணையாளர் அலுவலகம் போன்ற சர்வதேச நிறுவனங்களுடனும் தொடர்புபட்டுச் செயற்படவும், நல்லிணக்க ஆணைக்குழு அடங்கலான ஏனைய ஆணைக்குழுக்கள் மற்றும் அவற்றின் பரிந்துரைகள் செயற்படுத்தப்படுவதை ஆராயவும் சட்ட ஆதிக்கம் மனித உரிமை, நிர்வாகம் நீதிமன்றம் என்பவற்றின் புனர்வாழ்வு தொடர்பான நடவடிக்கைகளை பலப்படுத்தவும் இந்த செயலகம் நடவடிக்கை எடுக்க இருக்கின்றது.