வத்திக்கானுக்கான வெற்றிகரமான பயணத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (16) காலை நாடு திரும்பினார்.
பாப்பரசர் பிரேன்சிஸ் அவர்களின் விசேட அழைப்பையேற்று கடந்த 13ஆம் திகதி வத்திக்கான் சென்றடைந்த ஜனாதிபதி 14ஆம் திகதி பாப்பரசரைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது நாட்டில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள பணிகளை பாப்பரசர் பாராட்டினார். கடந்த ஜனவரி மாதம் தான் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது இலங்கை மக்கள் அவருக்கு வழங்கிய வரவேற்பு மற்றும் உபசரிப்புகளுக்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர், இலங்கை ஒரு அழகான நாடு என்றும் இலங்கை மக்கள் உபசரிப்பும் நட்புறவும் மிக்கவர்கள் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு ஒரு விசேட நினைவுச் சின்னத்தை வழங்கியதோடு, சமூக நீதி மற்றும் சூழல் பாதுகாப்பு தொடர்பாக தான் எழுதிய நூலொன்றையும் ஜனாதிபதிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து வத்திக்கான் அரச செயலாளர் காடினல் பியற்றோ பெரோலின் அவர்களையும் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
ரோமிலுள்ள சென் தோமஸ் ஆலயத்தில் 15ஆம் திகதி பேராயர் மெல்கம் ரஞ்ஜித் அவர்கள் வழங்கிய இராப்போசன விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி கலந்து கொண்டார். ஜனாதிபதியும் தூதுக்குழுவினரும் சென்பீற்றர் பெசிலிக்கா ஆலயத்திற்கும் விஜயம் செய்தனர்.