23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

வடக்கு, கிழக்கில் வீடுகள் அழிந்தமைக்கு புலிகளே முழுப்பொறுப்பு

107f66f6aa9a801d9d9f7ad1d2e09cce 400x400 16122015 kaaவியாழேந்திரன் எம்.பிக்கு அமைச்சர் சஜித் பதில்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடுகள் அழிந்தமைக்கு புலிகளே முழுமையான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுக்கும்போது இன,மத,குல பேதமின்றி சகலருக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறினார்.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தக் கருத்துக்களைக் கூறினார்.

முன்னதாக உரையாற்றிய கூட்டமைப்பின் உறுப்பினர் வியாழேந்திரன், கடந்த அரசாங்கத்தைப் போலல்லாது இந்த அரசாங்கம் வீடமைப்பு திட்டங்களை வழங்கும்போது பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு பாரபட்சமின்றி வீடுகளை வழங்க வேண்டும்.

90ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டபோது கிழக்கு மாகாணத்தில் பலருடைய வீடுகள் அழிக்கப்பட்டதுடன், பொருளாதாரம் நாசமாக்கப்பட்டது.

இதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பிக்கொண்டுவரும்போது இராணுவ நடவடிக்கைகளால் மீண்டும் அவர்களுடைய வீடுகள் அழிக்கப்பட்டன. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத் திட்டங்களை வழங்கும்போது வடக்கு, கிழக்கிற்கு கூடுதலான வீடுகளை வழங்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களின் காணிகள் பல இராணுவ முகாம்களாக உள்ளன. இவற்றில் பலருடைய வீடுகள் மற்றும் காணிகள் அகப்பட்டுள்ளன. காணிச் சொந்தக்காரர்களிடம் வீடுகள் வழங்கப்படவில்லை. இராணுவ முகாம்கள் உள்ள காணி உரிமையாளர்கள் பலர் வாடகை வீடுகளில் இருக்கின்றனர்.

இவ்வாறான மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவில்லை. வீட்டுத் திட்டங்களை வழங்கும்போது கடந்த காலங்களில் பாரபட்சங்கள் காட்டப்பட்டன. சிலரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால் வறிய மக்கள் வீடுகளைப் பெறமுடியாது போனது. வீட்டுத்திட்டங்களை வழங்கும்போது அதிகாரிகள் பக்கச்சார்பற்ற முறையில் நடந்துகொள்ள வேண்டும். இது குறித்து அரசாங்கமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய அமைச்சர் சஜித் பிரேமதாச, வடக்கு, கிழக்கில் வீடுகள் அழிவடைந்தமைக்கு புலிகளும் அவர்கள் ஆரம்பித்த யுத்தமுமே காரணம். இராணுவத்தினரால் வீடுகள் எதுவும் அழிக்கப்படவில்லை. அவர்களால் நாடு பாதுகாக்கப்பட்டது.

 வீடுகள் அழிக்கப்பட்டமைக்கு புலிகளே முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். புலிகள் யுத்தத்தை ஆரம்பித்தமையாலேயே வடக்கு, கிழக்கிற்கு இராணுவத்தினர் செல்லவேண்டி ஏற்பட்டது.

வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றங்களைப் பூர்த்திசெய்ய அரசு நடவடிக்கை எடுத்திருக்கும் அதேநேரம். அவர்களுக்குத் தேவையான வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இன,மத,குல வேறுபாடுகள் இன்றி அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும்.

அது மாத்திரமன்றி நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகளை வழங்கும் நோக்கிலும் சமாந்தரமான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.