23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

மருத்துவ சங்கம் நடத்துவது போராட்டமா? அல்லது அரசியலா?

n2 Dec18அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நடத்துவது தொழிற்சங்கப் போராட்டமா அல்லது அரசியல் ரீதியான போராட்டமா என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

2016ஆம் ஆண்டு இறுதியில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த இவர்கள் கனவுகாண்பதாகத் தெரிவித்த அவர், மக்களுக்கு சலுகைகள் வழங்குவதை எதிர்ப்பவர்களே வேலைநிறுத்தத்தில் குதிப்பதாகவும் குறிப்பிட்டார்.

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு, தொழில் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இரு பிரதான கட்சிகளும் இணைந்து நாடு முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை விரும்பாத அரசியல் அநாதைகளானவர்கள் அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து வருவதாகத் தெரிவித்த பிரதமர், தங்களது குறுகிய நோக்கங்களுக்காக மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

தனியார் துறைக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத்தில் இதனை நாம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றவிருக்கிறோம். இந்த சட்டமூலம் தாமதமானது குறித்து நாம் மன்னிப்புக் கோருகிறோம். நாம் வாக்களித்தபடி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம். எமது அரசாங்கம் இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாகவும், இந்த வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாகவும் மக்களுக்கு பல நிவாரணங்களை வழங்கியுள்ளது.

காஸ், பால்மா, கோதுமைமாவு, சீனி, பயறு, நெத்தலி கருவாடு, கருவாடு, மண்ணெண்ணெய் என்பவற்றின் விலைகள் குறைத்துள்ளோம். இதுதவிர மேலும் பல நிவாரணங்களை வழங்கியிருக்கிறோம். இந்த நிவாரணங்கள் மக்களைச் சென்றடைந்தன. இந்த நிவாரணங்களுக்கு எதிராகவே வேலைநிறுத்தம் செய்யப் போகின்றனர்.

நிவாரணம் வழங்கிய பொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறு கேட்டோ இந்தத் தொழிற்சங்கத் தலைவர்கள் குரல் எழுப்புகின்றனர். இந்த வரவுசெலவுத்திட்டம் எமக்கு வேண்டாம். முன்பிருந்த நிலையே தேவையென இவர்கள் கோருகிறார்களா? ஆனால் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவே நமக்கு மக்கள் ஆணை கிடைத்திருக்கிறது. அதற்காகவே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவுசெய்தார்கள்.

நாம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கியிருக்கிறோம். தொழிற்சங்கங்கள் தமது தரப்பு யோசனைகளை முன்வைத்தால் நாம் அது குறித்து கவனம் செலுத்தத் தயாராக இருக்கிறோம். புதிய லீசிங் நடைமுறையால் வங்கிகளின் வருமானம் குறைய நாம் இடமளிக்கப் போவதில்லை.

இது தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தியிருக்கிறோம். தொழிலாளர்களின் வேறு எந்தப் பிரச்சினை குறித்தும் நாம் பேச்சு நடத்தத் தயாராக இருக்கிறோம். வேலை நிறுத்தம் நடத்த வேண்டிய தேவை கிடையாது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருப்பதை விரும்பாததாலாயா இவர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் அவர்களுக்குப் போதுமாக இல்லை. எனவே எதிர்வரும் ஐந்து வருட காலத்தில் அவர்களுக்கு அடிப்படை வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

அரசியல் ரீதியில் அநாதரவாக்கப்பட்டவர்கள் இன்று மக்களை அநாதரவாக்க முயல்கிறார்கள். இவ்வாறானவர்களுக்கு வேண்டுமாயின் அடுத்தமுறை தேர்தலில் ஏதாவது ஒரு கட்சியில் போட்டியிட்டு அரசியலுக்குள் வரமுடியும். எனினும் நாம் எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கவிருக்கிறோம். எமது இந்தப் பணத்தை நிறுத்த முடியாது என்றார்.