16072024Tue
Last update:Wed, 08 May 2024

சில வாரங்களில் பாரிய மாற்றங்கள்

n13gபுதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணி ஆரம்பம்

அடுத்து வரும் சில வாரங்களில் நாட்டில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவிருப்பதாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் இந்த யாப்புக்கு நாட்டு மக்களின் கருத்துக்களும் கேட்டறியப்படும் என்றும் கூறினார்.

அரசாங்கம் மக்கள் குறித்து தீர்மானம் எடுப்பதற்கு மக்களின் பங்களிப்பு அவசியமானது எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர் தேசிய ஒற்றுமையைப் பாதுகாத்து முன்னேற்றப் பாதையில் பயணிப்பதற்கு சகலரும் ஒத்துழைப்பது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

நீதி அமைச்சின் உத்தியோகபூர்வ பத்திரிகையான ‘அதிகரண’ (நீதி) லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினமினவின் இணைப்பு பத்திரிகையாக வெளியிடப்படுகின்றது. இப்பத்திரிகையின் உத்தியோகபூர்வ வெளியீட்டு விழா லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் காவன் ரத்நாயக்கா தலைமையில் லேக்ஹவுஸ் மண்டபத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ் வைபவத்தின் போது அதிகரண இணைப்பு பத்திரிகையின் இணைய தளமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், குறிப்பிட்டதாவது,

லேக்ஹவுஸ் நிறுவனம் எனது வாழ்வுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்டுள்ளது. ஒரு சந்தர்ப்பத்தில் தினமின, சிலுமின மற்றும் ஒப்சேவர் பத்திரிகைகளில் பத்து வருடங்களுக்கும் மேலாக சட்டம் தொடர்பாக எழுதியுள்ளேன்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் இப்பத்திரிகைகளில் பத்திரிகைகளுக்கு கவிதைகளை எழுதியுள்ளேன்.

1997 ல் இலங்கை பத்திரிகை பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டேன். இக்காலப் பகுதியில் எமக்கு இடைக்கப்பெற்ற புகார்களை விசாரித்து சில சமயம் லேக்ஹவுஸ¤க்கு சாதகமாகவும் இன்னும் சில சந்தர்ப்பங்களில் எதிராகவும் தீர்ப்புக்களை வழங்கியுள்ளேன்.

அதன் பின்னர் 2003 ல் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக நியமிக்கப்பட்டேன். இப்பதவியை வகித்துக் கொண்டிருக்கும் போது பாராளுமன்ற அரசியலில் பிரவேசிக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை தொடர்ந்து பாராளுமன்ற அரசியலில் பிரவேசித்தேன்.

இலங்கையின் ஊடகத்துறை வரலாற்றில் லேக்ஹவுஸ் தனி இடத்தைப் பெற்றுள்ளது. அதிலும் இந்நாட்டு ஊடகங்களின் ஊற்றே லேக்ஹவுஸ் தான்.

இந்நாட்டின் சுதந்திர வேட்கையும் இங்கிருந்து தான் ஆரம்பமானது. 1920, 30 களில் இப் போராட்டத்தை தொடக்கி வைத்தவர்கள் லேக்ஹவுஸ் ஊடகவியலாளர்களாவர். அவர்களில் டி. பி. ஜயதிலக்க போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். ஊடவியலாளர்கள் ஆரம்பித்த சுதந்திர போராட்டத்தையே அரசியல்வாதிகள் தொடர்ந்தும் முன்கொண்டு சென்றனர்.

இன்று முக்கிய தினமாகும். எனது வாழ்வுடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் இணைந்து நான் பதவி வகிக்கும் அமைச்சின் உத்தியோகபூர்வப் பத்திரிகையை வெளியிடுவதாகும்.

இன்று எமது அரசாங்கத்தையும் எமது அமைச்சையும் எவரும் விமர்சிக்கலாம். அதற்கு முழுமையாக இடமளிக்கப்பட்டுள்ளது. அரச ஊடகங்கள் அனைத்தும் சுயாதீனமாக செயற்பட வகுக்கப்பட்டுள்ளன. இன்று ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படுகின்றனர். ஆனால் இந்த சுதந்திரமும் தவறாகவும் பிழையான முறையிலும் பயன்படுத்தப்படலாகாது. இச்சுதந்திரத்தைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.

ஜனநாயக நாட்டில் மக்களின் சுதந்திரத்தையும் அவர்களது பேச்சுரிமை, செயற்பாட்டுரிமை, வாழ்வுரிமை என்பவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு எம்முடையதே இருப்பினும் சட்டத்தில் குறைபாடுகள் ஏற்படுமாயின் நாடே சீரழிந்துவிடும்.

இதனைக் கருத்தில் கொண்டு தான் சோல்பரி பிரபு உள்ளிட்ட மூன்று பிரபுகளும் செயற்பட்டனர். சோல்பரி அரசியல் அமைப்பை எமக்கு வழங்கியே 1948 இல் இந்நாட்டுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.

இந்த சோல்பரி யாப்பை சோல்பரி பிரபு உள்ளிட்ட மூன்று பிரபுகள் தான் வரைந்தனர். அவர்கள் பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்தவர்கள் என்றாலும் அவர்களது நாட்டை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கான யாப்பை அவர்கள் வரையவில்லை. மாறாக இலங்கைக்கான அரசியல் யாப்பை வரைவதற்கான சோல்பரி பிரபு உள்ளிட்ட மூன்று பிரபுக்களும் யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, கண்டி, அநுராதபுரம், பொலன்னறுவை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கும் நேரில் சென்று மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் தான் சோல்பரி யாப்பை வரைந்தனர். இதற்கென இருவருடங்கள் சென்றன.

ஆனால் 1972 ஆம் ஆண்டில் முதலாவது குடியரசு யாப்பு கொண்டு வரப்பட்டது. அதனைத் தயாரிப்பதற்கு சோல்பரி பிரபு தலைமையிலான பிரபுகள் போன்று நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதன் விளைவாக 1976 ஆம் ஆண்டாகும் போது, அ. அமிர்தலிங்கம், போன்றோர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு சென்றனர். இதற்கு 1956 ல் கொண்டு வரப்பட்ட சில சட்டங்களும் 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பு பெரிதும் உதவியது. 1972 ல் பெரிய இடதுசாரி தலைவர்கள் இருந்தும் எல்லா மக்களையும் ஒன்றாகத் தக்க வைத்துக் கொள்ளத் தவறியதன் விளைவாகவே அவ்வாறான ஒரு தீர்மானத்திற்குத் தமிழத் தலைவர்கள் சென்றனர்.

இதன் விளைவாக நாட்டில் ஆயுத மோதல் தோற்றம் பெற்றது. இதற்கு 1978ல் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது குடியரசு யாப்பு பெரிதும் உதவியது, முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை யாப்பாக அதனை நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். இதுவும் மக்களது கருத்தறியாது அறிமுகப்படுத்தப்பட்ட யாப்பே. அதனால் இந்த யாப்புக்கு எதிராக இந்நாட்டு மக்கள் சுமார் முப்பது வருடங்கள் போராடினர்.

முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன பிரான்ஸை முன்னுதாரணமாகக் கொண்டு தான் இரண்டாவது குடியரசு யாப்பை தயாரித்தார். இலங்கை, பாகிஸ்தான், மாலைதீவு உட்பட 32 நாடுகள் பிரான்ஸ் யாப்பை அடிப்படையாகக் கொண்டு தம் நாடுகளுக்கான அரசியல் யாப்புக்களைத் தயாரித்துள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் தோல்வியுற்றுள்ளன.

அதனால் தான் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன இந்த யாப்பை அறிமுகப்படுத்தி இரு வருடங்கள் கழிவதற்குள் அதிலுள்ள குறைபாடுகளை உள்ளடக்கி ஏ. ஜே. வில்சன் நூலொன்றை எழுதி வெளியிட்டார். இந்த யாப்பினால் நாட்டில் சர்வாதிகாரப் போக்கே ஏற்பட்டது. இந்த யாப்பு தொடர்பாகப் போதிய அனுபவங்களை இந்நாட்டவர்கள் பெற்றுள்ளனர்.

இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் குவிந்திருந்த அதிகாரங்கள் தான் அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றத்திற்கும், அமைச்சரவைக்கும், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும், அரசியலமைப்பு பேரவைக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நாட்டில் பாராளுமன்றம் பலவீனமான நிலையில் இருந்த சமயங்களில் தான் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாம் 2014 ஜனவரி 8 ஆம் திகதியின் பின் 43 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்கத்தை வைத்துக் கொண்டு தான் அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தை நிறைவேற்றினோம். இதற்கு எதிர்க் கட்சியிலிருந்த பெரும்பகுதி எம்.பிக்கள் ஆதரவு நல்கின்றனர். இதேபோன்று 2000 ஆம் ஆண்டில் பாராளுமன்றம் பலவீனம் அடைந்து நன்நடத்தை அரசாங்கம் உருவாகி இருந்த போது அரசியலமைப்புக்கான 17 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 2010 ல் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்த அரசாங்கம் அரசியலமைப்புக்கான 18வது திருத்தத்தை கொண்டு வந்தது. இதனூடாக ஜனநாயக கட்டமைப்புக்கள் வலுவிழக்கச் செய்யப்பட்டன.

இதன்படி பாராளுமன்றம் பலவீனமான நிலையில் இருந்த போது தான் ஜனநாயகத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டு மக்கள் பெரிதும் நன்மை அடைந்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் நாட்டுக்குப் புதிய யாப்பை அறிமுகப்படுத்துவதாகக் கூறினோம். அதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வைபவத்தில் ஓய்வுபெற்ற நீதியரசர் ஹெக்டர் யாப்பா பிரதியமைச்சர் துஷ்யந்த மித்ரபால, அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, அரசாங்க பகுப்பாய்வாளர் சகுந்தலா தென்னக்கோன், லேக்ஹவுஸ் நிறுவன ஆசிரியர் பீடப் பணிப்பாளர் சமன் வகஆராச்சி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.