பலவந்தமான ஆட்கடத்தலிலிந்து தனி நபர்களை பாதுகாக்கும் சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
நேற்று சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். இதனை முன்னிட்டு ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி ருவன் பெரேரோ இந்த பிரகடனத்தில் கைச்சாத்திட்டார்.
இந்த பிரகடனத்தை 2016 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டுவரும் வகையில் சட்டமா அதிபர் திணைக்களம் சட்ட tவரைபுகளை முன்னெடுத்து ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் சமரவீர கூறினார். பலவந்தமாக காணாமல் போவதிலிருந்து தனிநபர்களை பாதுகாக்கும் சட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வருவதன் மூலம், எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய ஒவ்வொரு காணாமல் போதலுக்கும் அரசாங்கம் சர்வதேச நீதிமன்றம் வரை பொறுப்புக்கூற வேண்டிய நிலை உருவாகுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இச் சட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் எக்னெலிகொட போன்றோர் காணாமல் போதல், வெள்ளை வேன்களின் கடத்தல் சம்பவம் இடம்பெறமாட்டாது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.
இந்த சட்டம் ஒவ்வொரு இலங்கை பிரஜையையும் பாதுகாக்கும். வெள்ளைவேன் யுகம் மீண்டும் இடம்பெற மாட்டாது. இதன் கீழ் மக்கள் அச்சமின்றி வாழ முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் சமரவீர பதிலளித்ததாவது,
கேள்வி : இந்த சட்டம் ஏனைய சட்டங்களிலிருந்து எவ்வாறு வேறுபடும்?
பதில் : இது ஒரு படி முன்னேற்றகரமானதாக இருக்கும். ஆட்கடத்தல் காரணமாக பல தசாப்தங்களாக நாம் துன்புற்றோம். இனிமேல் நாட்டில் இவ்வாறானதொரு நிலை உருவாகாது.
கேள்வி : சட்ட வரைபை மேற்கொள்வதற்கு குறுகிய காலம் போதுமானதாகுமா?
பதில் : நிச்சயமாக, இது நேரடி விடயம். ஜனவரிக்குள் இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும்.
கேள்வி : இந்த சட்டம் ஏற்கனவே காணாமல் போனவர்கள் தொடர்பிலும் செல்லுபடியாகுமா?
பதில் : இல்லை. இது எதிர்காலத்திற்குரியது. ஏற்கனவே காணாமல் போனவர்கள் தொடர்பில் நாம் பல்வேறு பொறிமுறைகளின் கீழ் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறோம்.
கேள்வி : சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் ஆட்கடத்தல்கள் இடம்பெறாது என்பதற்கு என்ன உறுதி?
பதில் : அதன் பின்னரும் காணாமல் போதல் இடம்பெற்றால் அரசாங்கம் அதனை கைவிட முடியாது. அரசாங்கம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொறுப்பு கூறவேண்டும்.
கேள்வி : ஜனவரி 08 ஆம் திகதிக்குப் பின்னரும் வெள்ளை வேன் கடத்தல் இடம்பெற்றிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் கூறியிருக்கிறாரே?
பதில் : அவர் எனது நண்பர். ஆனால் அது குறித்து நான் அறிந்திருக்கவில்லை. சம்பவ இடம், நேரம், திகதி, பாதிக்கப்பட்டவரது பெயர் உள்ளிட்ட விரிவான தவகல்களை எனக்கு தந்தால் நான் விசாரணையை முன்னெடுப்பேன்.
ஐ. நா. பிரதிநிதிகள் இலங்கை வந்தபோது சில பொலிஸ், இராணுவ அதிகாரிகள் பொதுமக்களை அச்சுறுத்தியதை நேரில் கண்டதாக கூறினர். அவ்வாறான பொலிஸாரின் இலக்கங்கள் குறித்து கேட்டிருந்தோம். ஆனாலும் எமக்கு பதில் கிடைக்கவில்லை.
அச்சுறுத்தல் விடுக்கும் பொலிஸ் அல்லது இராணுவ அதிகாரிகளை அரசாங்கம் பாதுகாக்காது. ஒருசில அதிகாரிகள் தொடர்ந்தும் பழைய பாணியிலேயே செயற்படலாம். இருப்பினும் பலர் எமக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.
கேள்வி : எல். ரீ. ரீ. ஈ. சந்தேகத்தின் பேரில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமா?
பதில் : ஆம், பல கொலைகளுக்கு காரணமான கருணா அம்மான் அரசியலில் உயர் பதவி வகிக்கையில் எவ்வித குற்றச்சாட்டும் இல்லாத இவர்களை விடுவிப்பதில் பிரச்சினையில்லை.
கேள்வி : முன்னாள் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்திலும் இரகசிய தடுப்பு முகாம் இருப்பதாக கூறியுள்ளாரே?
பதில் : அதுபற்றி கூறி திரிவதில் அர்த்தமில்லை. சரியான தகவல்களை வழங்கினால் அவர் அங்கு நேரில் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாக பெற்றுத் தருவோம்.