16072024Tue
Last update:Wed, 08 May 2024

இயற்கை வளங்களை அழிப்பதற்கு எந்தவிதத்திலும் இடமளிக்கப்போவதில்லை – ஜனாதிபதி

Presidential Media Unit Common Banner 1சட்ட விரோதமான மரம் வெட்டுதல், மணல் அகழ்தல், கல் உடைத்தல் மற்றும் இரத்தினக்கல் அகழ்தல் ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் மீது அவர்களின் தராதரம் பார்க்காது சட்டத்தை அமுல்படுத்துவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தின்போது மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் விவாதத்தில் கலந்துகொண்டபோது இயற்கை வளங்களை அழிப்பதற்கு எந்தவிதத்திலும் இடமளிக்க முடியாதென ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

உள்நாட்டில் இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எந்தவொரு வெளிநாட்டுக் கம்பனிக்கும் புதிய அரசு அனுமதிப்பத்திரம் வழங்கவில்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் தான் பதவியேற்றதன் பின்னர் ஆரம்ப நடவடிக்கையாக கடந்த அரசாங்கத்தினால் 04 வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்ததாக குறிப்பிட்டார்.

காடுகள் அழிக்கப்படுவதை முற்றுமுழுதாக நிறுத்துவதற்கு இராணுவம், பொலிஸ், வனப்பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், காடுகளை அழிப்பதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் மீளக் குடியமர்த்துதல் தொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றுத் தீர்மானங்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மீளக்குடியமர்த்துதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், வடக்கு பிரதேசத்திற்குச் சென்று இந்நடவடிக்கைகளை அவதானித்து அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடுமாறு ஆளுங்கட்சியினதும் எதிர்க்கட்சியினதும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்ததுடன், தேவையாயின் அதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்யமுடியுமெனவும் குறிப்பிட்டார்.

சுற்றாடல் அமைச்சின்மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எதிர்வரும் மூன்றாண்டு கால திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்வதேச ஒப்பந்தங்களின் பிரகாரம் ஓசோன் படையை பாதுகாத்தல், வியானா ஒப்பந்தம் போன்ற விடயங்கள் தொடர்பாக அரசு உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

புல்மோட்டை இல்மனைட் தொழிற்சாலையில் கடந்த சில ஆண்டுகளாக இடம்பெற்ற ஊழல்கள் பற்றி கண்டறிவதற்காக புறம்பான விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இல்மனைட் கைத்தொழிலின் வருமானத்தினை பெற்றுக்கொள்ளக்கூடியவாறு புதியதொரு வேலைத்திட்டத்தினை தயாரிப்பதாக தெரிவித்தார்.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வேலைத்திட்டத்தினுள் தேவைப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.