தமிழர்களையும் தமிழ் அமைப்புக்களையும் புதிய கோணத்திலேயே எமது அரசாங்கம் நோக்குகிறது. நாம் இனவாதத்துடன் செயற்படவில்லையென சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
சர்வதேச பொலிஸ் சர்வதேச புலனாய்வு அமைப்புக்கள் புலனாய்வுத்துறை என்பவற்றின் முடிவுகளுக்கமையவே தமிழ் அமைப்புகளின் தடை நீக்கம் செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார். புலம்பெயர்ந்த அமைப்புப்கள் மீதான தடை நீக்கப்பட்டது தொடர்பாக டலஸ் அழகப்பெரும எம். பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அனைத்து தமிழ் மக்களும் புலிகளல்ல சகல தமிழ் அமைப்புக்களும் புலிகளுடன் தொடர்புள்ள அமைப்புக்களல்ல கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சகல தமிழ் மக்களையும் புலிகளாகவே பார்த்தது.
அனைத்து புலம்பெயர் அமைப்புகளையும் புலி அமைப்புகளாகவே சித்தரிக்கப்பட்டன. தமிழர்களையும் தமிழ் அமைப்புககளையும் கடந்த அரசு துரத்திச் சென்றது. வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு தமது சொந்த இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
ஆனால் எமது அரசாங்கம் அந்த கோணத்தில் பார்க்கவில்லை. தமிழர்களை நாம் இனவாதத்துடன் பார்க்கமாட்டோம். புதிய அரசாங்கம் சகலவற்றையும் புதிய கோணத்தில் பார்க்கிறது.
நாம் கண்ணைமூடிக் கொண்டு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கவில்லை. சர்வதேச பொலிஸ் சர்வதேச புலனாய்வு அமைப்புக்கள் புலனாய்வுத்துறை என்பவற்றின் முடிவுகளுக்கமையவே தடை நீக்கம் செய்யப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை இது குறித்துப் பதிலளித்த இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, தடைகள் நீக்கப்பட்ட அமைப்புக்களின் கடந்த மூன்று வருடகால செயற்பாடுகளை கண்காணித்தே தடை நீக்கம் பற்றிய முடிவுக்கு வந்ததாகக் கூறினார். தொடர்ந்தும் கருத்துத் வெளியிட்ட அவர்,
2012 ஐ. நா. ஒழுங்கு விதிகளின் பிரகாரம் 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 2014-03-21ஆம் திகதி 16 அமைப்புக்களும் 344 நபர்களுக்கும் தடைவிதிக்கப்பட்டது. 2015-11-20 ஆம் திகதி திருத்திய வர்த்தமானியின் பிரகாரம் 8 அமைப்புகளுக்கும் 155 நபர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த அமைப்புக்களின் கடந்த 3 வருட கால செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டே தடை நீக்கப்பட்டது. மூன்று வருட காலத்தில் அவை பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக நிதி உதவிகள் வழங்கியதா என்பது குறித்து ஆராயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.