23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

வழக்கை மீண்டும் விசாரிக்க சவூதி சமிக்ஞை

n 8 Dec9கல்லெறிந்து கொல்லும் தண்டனை

* தீர்ப்பை மாற்றியமைக்க இலங்கை முயற்சி; தூதரக அதிகாரிகள் துரித பணி

சவூதி அரேபியாவில் கல்லடித்துக் கொல்லப்பட இருக்கும் இலங்கை பெண்ணின் வழக்கை மீண்டும் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிரான தீர்ப்பை மாற்றியமைக்க முழு முயற்சி மேற்கொள்வதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இது தொடர்பில் பல சுற்று பேச்சுக்கள் நடத்தப்பட்டன. சவூதி அரேபிய ரியாத் மேன்முறையீட்டு  நீதிமன்றத்தின் நிலைப்பாடு தொடர்பாக பிரதேச நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் எமது அரசாங்கம் சட்ட ஆலோசனையின் பிரகாரம் மீண்டும் இந்த வழக்கை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.n 9 250x333

வெளிவிவகார அமைச்சு சகல செலவுகளையும் ஏற்று குறித்த பெண்ணை மீட்பதற்கு முழு முயற்சி மேற்கொள்ளும். எமது தூதரக உயரதிகாரிகள் கடந்த ஞாயிறன்று சிறைச்சாலைக்குச் சென்று தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணை சந்தித்துள்ளனர். இவருடன் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. இவருக்கு எதிரான வழக்கை மீள விசாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பது எமக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம். இந்த வழக்கை மீள விசாரிப்பதற்கான முழுச் செலவையும் வெளிவிவகார அமைச்சு ஏற்கிறது.

இதேவேளை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் சிறையிலிருக்கும் பெண்ணை சந்தித்து நீண்ட நேர கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் பிரதியமைச்சர் கலாநிதி சில்வா தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த நற்செய்தி கிடைக்குமெனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.

திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்த வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா, குறித்த பெண் விடுவிக்கப்படாவிடில் அது அரசாங்கத்துக்கு பாரிய இழப்பாகுமென தெரிவித்தார். எவ்வாறாயினும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறித்த இலங்கை பணிப்பெண் தவறு இழைத்ததற்கான சாட்சியங்கள் இல்லையென்று கூறினார்.