* தொடரும் மழையால் 12 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு
* 34 குளங்கள் நிரம்பி வழியும் நிலை
வழமையை விடவும் இம்மாதம் அதிக மழை கிடைக்கப்பெற முடியுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழமையை விட 40 வீதம் அதிக மழை கிடைக்கப் பெற்று இருப்பதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில தினங்களாகப் பெய்த தொடர் மழை காரணமாக நாட்டில் 34 பாரிய குளங்கள் நிரம்பி வழிவதாகவும் 12 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்படுவதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களக்களத்தின் பணிப்பாளர் கு. சிவபால சுந்தரம் நெற்று தினகரனுக்குக் கூறினார்.
உருகாமம், வான்எல, உன்னிச்சை, இராஜாங்கனை, தப்போவ, இலங்கினிமிட்டிய, தெதுருஓயா, வேரகல, லுனுகம்வெகர, முருத்தவெல, சேனநாயக்க சமுத்திரம், பராக்கிரம சமுத்திரம் ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளே திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப் படுவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை விக்டோரியா, ரந்தெனிகல, ரன்டெம்பே, கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் கட்டத்தை அடைந்துள்ள போதிலும், வான் கதவுகளைத் திறந்து மேலதிக நீரை வெளியேற்றாது உச்சளவில் மின்னுற்பத்தி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி குறிப்பிடுகையில், மன்னார் புத்தளத்திற்கான வீதியிலுள்ள எலுவன் குளத்தில் சுமார் ஐந்தடிகள் தண்ணீர் பாய்வதால் இப்பாதை போக்குவரத்துக்குத் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இதேநேரம் வளிமண்ட லவியல் திணைக்களத்தின் கடமை நேர உத்தியோகத்தர், அடுத்துவரும் சில தினங்களுக்கு இடிமின்னலுடன் மழை செய்ய முடியும்.
அதனால் அதன் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்வதில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அத்தோடு இவ்வருடம் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் 05ம் திகதி வரையும் இடி மின்னல் காரணமாக 31 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.
அடுத்துவதும் இரண்டொரு தினங்களுக்கு வடக்கு, கிழக்கு ஊவா மாகாணங்களில் அதிக மழை பெய்ய முடியும் எனக்குறிப்பிட்ட அவர் மன்னார். காங்கேசன் துறை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் காற்றின் வேகம் இடையிடையே மணித்தியாலத்திற்கு 70 - 80 கிலோ மீற்றர்கள் வரை அதிகரிக்க முடியும் என்றார்.