23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

ஏன் புலி சந்தேகநபர்களை விடுவிக்க முடியாது

download 2 150pxமஹிந்த விடுவித்த 95 பேரையும் விட குறைந்த குற்றச்சாட்டு உள்ள கைதிகளே விடுவிப்பு

பயங்கரவாதிகளில் தமிழ், சிங்களம் என்ற பாகுபாடு இருக்க முடியாது. ஜே.வி.பி. சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்ய முடியுமானால் ஏன் எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபர்களை மாத்திரம் பிணையில் விடுவிக்க முடியாதென அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் ராஜித்த சேனாரத்ன நேற்று கேள்வி எழுப்பினார்.

இந்த அரசாங்கம் எல்.ரீ.ரீ.ஈ. சிறைக் கைதிகளை பிணையில் விடுவிப்பதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக பாராளுமன்றத்தில் கூச்சலிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் 2010 ஆம் ஆண்டில் விடுதலை செய்த முக்கிய புலி உறுப்பினர்கள் உள்ளிட்ட 95 பேரின் குற்றச்சாட்டுக்களுடன் ஒப்பிடுகையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக்கைதிகளின் குற்றச்சாட்டுக்கள் மிக குறைவு அல்லது இல்லை என்றே கூறவேண்டும் எனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் சிறைக் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதிர்க்கட்சியினர் அரசாங்கம் மீது பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த போதும் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற மேற்படி சம்பவத்தை பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களங்கள் வெளிக்கொணராமல் பாராமுகமாக இருந்தது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போது இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

முன்பு பாராளுமன்றத்தில் நல்லிணக்கம் பற்றி பேசியவர்கள் இன்று தேசிய பாதுகாப்புக் குறித்து கூச்சலிடுகின்றனர். கடந்த ஆட்சிக்காலத்தில் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிக்கிடைப்பட்ட காலப்பகுதியில் முக்கிய எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபர்கள் ஐவர் உள்ளிட்ட 95 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு பிரிவைச் சேர்ந்த முரளி சிவஞானி முத்தலிப் என்பவர் பொட்டு அம்மானின் உத்தரவின் பேரில் வெளிநாடுகளிலிருந்து தமது அமைப்புக்கு வரும் பணத்தை தெஹிவளையிலுள்ள செலான் வங்கி கிளையிலிருந்து மீளப்பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். இவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

அதேபோன்று எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வைச் சேர்ந்த நடராசா சிவராசா என்பவர் கப்பில அம்மானின் உத்தரவின் பேரில் கொழும்பில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு கொட்டாஞ்சேனையில் தங்குமிட வசதி வழங்கியமைக்காக 07 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

புலிகளின் ஆயுதப் பயிற்சி பெற்ற சண்முகம் பாஸ்கரம் வன்னியில் முப்பபைகள் மீது தாக்குதல் நடத்தியவர், அந்தோனிமுத்து அருள் ஜோன்சன் 2000 ஆம் ஆண்டு கடல் புலிகள் அமைப்பில் சேர்த்து 2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தற்கொலை குண்டுதாரியாக திருகோணமலை கடற்படை முகாமை தாக்க வந்தவர்.

செல்வராசா நகுலேஸ்வரன் எல்.ரீ.ரீ.ஈ. கொழும்பு புலனாய்வுத் துறைக்குப் பொறுப்பாக இருந்த சார்ள்ஸ¤க்கு பிரத்தியேக உதவியாளராக செயற்பட்டவர். இவர்கள் உள்ளிட்ட 95 பேர் அப்போதைய நீதிபதி மொஹான் பீரிஸின் கையொப்பத்துடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டமையை இலங்கை பொலிஸ் திணைக்களம் பெயர் விபரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளது.

அரசாங்கம் மீது எதிர்க்கட்சியினர் சேறுபூசும் சந்தர்ப்பங்களில் பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களங்கள் மெளனம் சாதித்திராமல் இதனை எமக்கு வெளிப்படுத்தியிருக்கலாம். கடந்த 24 ஆம் திகதி வரை அரசாங்க தரப்பைச் சேர்ந்த எவரும் 2010 ஆம் ஆண்டில் நடந்த உண்மை தெரியாமலேயே அதுவரை இருந்தோம் என்றும் அவர் கூறினார்.

இந்த அரசாங்கம் மிகக்குறைந்த குற்றச்சாட்டுக்களையுடைய சிறைக் கைதிகளையே பிணையில் விடுவித்தது. 2010 ஆம் ஆண்டு நடந்ததை பார்க்கையில் தற்போதைய சிறைக்கைதிகள் தாங்களனைவரையும் பொது மன்னிப்பில் விடுதலை செய்யுமாறு கேட்பார்கள் என்றே தோன்றுகிறது.

தற்போதும் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி நூற்றுக்கணக்கானோர் சிறையிலுள்ளனர். இவர்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை சேகரிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லாத பட்சத்தில் அவர்கள் விடுதலை செய்யப்படுவது உறுதியென்றும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினரான குமரன் மத்மநாதன் எங்கே? அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லையா? என செய்தியாளர் ஒருவர் கேட்ட போது “அவர் நன்றாக இருக்கிறார். குற்றச்சாட்டுக்களை பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களங்கள் இன்னமும் தேடி வருகின்றன” (.....சிரிக்கிறார்) என்றும் அமைச்சர் தெரிவித்தார்.