ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் எந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை வெளிநாட்டுத் தலைவர்கள் தேடிவந்து சந்திக்கும் அளவுக்கு சர்வதேச ரீதியில் நாட்டுக்கு வரவேற்புக் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். வரவுசெலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான ஒன்பதாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றியிருந்த தினேஷ் குணவர்த்தன எம்.பி, இலங்கையைப் போன்று அமெரிக்காவும் சீனாவிடம் மண்டியிடுவதாகக் கூறியிருந்தார். இதன்மூலம் கடந்த அரசாங்கத்தில் இலங்கை சீனாவிடம் மண்டியிட்டிருந்தது என்பது புலனாகிறது.
எனினும், நான் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் யாருக்கும் வளைந்து கொடுக்காத வெளிநாட்டுக் கொள்கையுடன் எமது அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் எந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாது. மோல்டா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்குச் சென்றிருந்த ஜனாதிபதியை, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் தேடிவந்து சந்தித்திருந்தனர். எமது ஜனாதிபதியுடன் ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் கோருகின்றனர். அதேபோல வெளிநாடுகள் பிரதமரின் நலன் குறித்து விசாரிக்கின்றனர். சர்வதேச ரீதியில் இலங்கைக்கான வரவேற்பு கிடைத்துள்ளது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. நாம் சீனாவுடன் நட்புடன் இணைந்து செயற்பட்டுவருகிறோம் என்றார்.
இதேவேளை, அரசியல் காரணங்களுக்காக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தடைசெய்யப்பட்ட புலம்பெயர்ந்த அமைப்புக்கள் மற்றும் நபர்களின் தடைகளை நீக்குவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தை சிலர் எதிர்த்து வருகின்றனர். புலிகளை பாதுகாப்பதற்கு நாட்டைக் காட்டிக்கொடுப்பதாக அவர்கள் எம்மீது குற்றஞ்சுமத்துகின்றனர். உயிரிழந்து பல வருடங்கள் சென்றவர்களின் பெயர்களை கூட புலிகள் எனக் கூறி பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காகவே இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
இது இவ்விதமிருக்க, கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகள், கொள்ளைகள், கொலைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற 725 முறைப்பாடுகளில் ராஜபக்ஷ குடும்பத்தினர் நேரடியாக அல்லது மறைமுகமாகத் தொடர்புபட்டுள்ளனர். ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிரான ஒரு மோசடி குறித்த விசாரணையை நடத்துவதற்காக அதிகாரிகள் 6 அல்லது 7 பேர் வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டி ஏற்படுகிறது. அதிகாரிகள் பற்றாக்குறை போன்ற காரணத்தால் விசாரணைகளில் காலதாமதம் ஏற்படுகிறது என்றும் தெரிவித்தார்.