17072024Wed
Last update:Wed, 08 May 2024

கேம்பிரிட்ஜில் இலங்கையர் இருவருக்கு உச்ச பெறுபேறுகள்

cambridge outstanding learners awards november 2015கேம்பிரிட்ஜ் சர்வதேச பரீட்சைகள், இலங்கையில் மிகச் சிறந்த கேம்பிரிட்ஜ் பயிலுனர் விருதுகளின் வெற்றியாளர் விபரங்களை அண்மையில் அறிவித்துள்ளது. 2014 நவம்பர் மற்றும் 2015 ஜுன் கற்கை பருவகால கேம்பிரிட்ஜ் தொடர் பரீட்சைகளில் இலங்கையில் இடைநிலை பாடசாலை பயிலுனர்கள் மத்தியில் மிகச் சிறந்த கல்விப் பெறுபேறுகளைக் கொண்டாடும் வகையில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. 

கேம்பிரிட்ஜ் சர்வதேச பரீட்சைகளுக்கான சர்வதேச வலையமைப்பின் பிரதிப் பணிப்பாளரான கை சாப்மன் மற்றும் இலங்கையில் பிரிட்டி~; கவுன்சில் நிலையத்தின் உள்நாட்டு பணிப்பாளரான கீத் டேவிஸ் மற்றும் கேம்பிரிட்ஜ் சர்வதேச பரீட்சைகளின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்து, 2015 நவம்பர் 28 அன்று கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். 

 

 

இலங்கைக்கான பாடசாலைகள் அபிவிருத்தி முகாமையாளரான பஞ்சலிகா குலதுங்க அவர்கள், மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் திறமையாகச் செயற்படுவதற்கு அவர்களை தயார்படுத்தும் வகையில் மாணவர்களின் ஆக்கத்திறன், திறனாய்வுச் சிந்தனை மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் திறன் ஆகியவற்றை அபிவிருத்தி செய்து மதிப்பீடு செய்வதற்கு கேம்பிரிட்ஜ் கற்கைநெறிகள் உதவுவதாகக் குறிப்பிட்டார்.

“கடின உழைப்பும், திறமையும் கொண்ட இளம் மாணவர்களின் பாரிய சாதனைப் பெறுபேறுகள், அவர்களுடைய ஆசிரியர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களுடைய பெற்றோர்களின் ஆதரவு ஆகியவற்றைக் கொண்டாடும் ஒரு நிகழ்வாக இது அமைந்துள்ளது. இந்த மாணவர்கள் தமது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குள் காலடியெடுத்து வைக்கும் தருணத்தில் தாங்கள் பெற்றுக்கொண்ட தகைமைகள் உலகளாவில் முன்னிலை வகிக்கும் பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்படுபவையாக உள்ளன என்ற தன்னம்பிக்கையைப் பெற்றுக்கொள்ள முடியும். தனிப்பட்ட ரீதியில் அவர்கள் நவீன உலகில் வெற்றிபெறுவதற்கு முற்றிலுமாக தயார்படுத்தப்பட்டுள்ளனர்.” 

22 பாடசாலைகளைச் சார்ந்த 114 பயிலுனர்கள், கேம்பிரிட்ஜ் பரீட்சைகளில் தமது அதிசிறந்த பெறுபேறுகளைக் கொண்டாடினர். இந்த ஆண்டில் இரு கேம்பிரிட்ஜ் பயிலுனர்கள் கேம்பிரிட்ஜ் சாதாரண தர பரீட்சைகளில் ஒரே பாடநெறியில் உலகிலேயே அதியுச்ச புள்ளிகளை ஈட்டியுள்ளனர்.

றோயல் இன்ஸ்டிடியூடின் காயத்ரினி தரீஷா பிரேமவர்த்தன அவர்கள் உயிரியல் பாடத்திலும், Yoshida Shokanji சர்வதேச பாடசாலையின் டி. சர்தா பிரார்த்தனா பெரேரா அவர்கள் பிரெஞ்சு பாடத்திலும் அதியுச்ச புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இலங்கையில் மொத்தமாக 39 பயிலுனர்கள் ஒரே பாடநெறியில் அதியுச்ச புள்ளிகளைப் பெற்றுள்ளனர். உயிரியல், கணக்கியல் மற்றும் வணிகக் கல்வி அடங்கலாக பல்வேறு பாடங்களில் இந்த மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.   

கேம்பிரிட்ஜ் சாதாரண தரத்தில் உயிரியில் பாடத்தில் உலகில் அதியுச்ச புள்ளிகளைப் பெற்ற காயத்ரினி தரீஷா பிரேமவர்த்தன கூறுகையில் “நான் எனது கேம்பிரிட்ஜ் சாதாரண தரத்தை ஜுனில் பூர்த்தி செய்துள்ளதுடன், உயிரியியல் பாடத்தில் உலகளாவில் அதியுச்ச புள்ளியையும், பௌதிகவியல், இரசாயனவியல் மற்றும் ஆங்கில மொழி ஆகிய பாடங்களில் இலங்கையில் அதியுச்ச புள்ளிகளைப் பெற்றுள்ளமையை இட்டும், 7 ஏ தர சித்திகள் மத்தியில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளதையிட்டும் மிகவும் பூரிப்படைந்துள்ளேன். 

“13 ஆண்டுகளாக றோயல் இன்ஸ்டிடியூட்டில் மாணவராக இருப்பதுடன், எனது அன்பிற்குரிய ஆசிரியர்களின் மிகச் சிறந்த கல்வி சார் வழிகாட்டல் மற்றும் அர்ப்பணிப்பு மற்றும் எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மகத்தான ஊக்குவிப்பிற்கு இந்த வெற்றி சான்று பகருகின்றது. நான் கல்வி கற்ற போது அனைத்துப் பாடங்களில் சிறந்த அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது பிரதான நோக்கமாக இருந்தது.

பரீட்சைகள் நெருங்கிய காலத்தில் மதிப்பீடுகளின் கட்டமைப்பை பரீட்சயப்படுத்திக் கொள்வதற்கும், நேரத்தினை சிறந்த முறையில் நிர்வகிக்கும் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கும் பல கடந்த கால வினாக்களை பூர்த்திசெய்ய வேண்டும் என்ற இலக்குடன் செயற்பட்டேன். இது உண்மையில் மகத்தான ஒரு அனுபவமாக அமைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் இதன் பயனை அறுவடை செய்வதில் திடசங்கல்பத்துடன் உள்ளேன்.” 

கேம்பிரிட்ஜ் சாதாரண தரத்தில் பிரெஞ்சு பாடத்தில் உலகளாவில் அதியுச்ச புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட டி. சர்தா பிரார்த்தனா பெரேரா அவர்கள் கூறுகையில் “மொழிகளைக் கற்பது எனக்கு மிகவும் பிடிக்கும், பிரெஞ்சு மொழியில் உலகிலேயே அதியுச்சப் புள்ளிகளைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இந்த மொழியை நான் மிகவும் நேசித்தமை மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும்.

மொழிகளைக் கற்க விரும்புகின்றவர்களுக்கு நான் கூறக்கூடிய ஆலோசனை என்னவென்றால், முதலில் நீங்கள் கற்கும் மொழியை மிகவும் நேசியுங்கள், ஏனென்றால் இது உங்களது மூளையில் இருந்து வருவதில்லை, மாறாக இதயத்திலிருந்து வருகின்றது. பரீட்சைக்கு முன்பதாக உப தலைப்புக்கள் இன்றி பிரெஞ்சு மொழி திரைப்படங்களைப் பார்த்து என்னை தயார்படுத்திக் கொண்டதுடன், கடந்த கால வினாத்தாள்களையும் மீட்டி, எனது பிரெஞ்சு ஆசிரியருடன் முடிந்த வரை பிரெஞ்சு மொழியிலேயே தொடர்பாடல்களைப் பேணினேன்.

மேலும் ஏராளமான கட்டுரைகளை எழுதியதுடன், Madame Bovary போன்ற நாவல்களை வாசித்தேன். எனது பிரெஞ்சு மொழி ஆசிரியர், எனது வகுப்பாசிரியர், Yoshida Shokanjiசர்வதேச பாடசாலையின் அதிபர் உட்பட எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும், தொடர்ச்சியாக என்னை ஊக்குவித்து, வழிகாட்டிய எனது பெற்றோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.” 

இலங்கையில் இன்னமும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படாமல் காணப்படுகின்ற பாடங்களில் மிகச் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தி, பல்வேறு பாடங்களில் உச்ச மொத்த புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட பயிலுனர்கள் ‘உயர்ந்த சாதனைப் பெறுபேறுகளுக்காக’ அங்கீகரிக்கபட்டு, இந்த பயிலுனர்களின் சாதனைகள் விருதுகள் மூலமாக கொண்டாடப்பட்டுள்ளன. கேம்பிரிட்ஜ் சாதாரண தரம், கேம்பிரிட்ஜ் IGCSE®, கேம்பிரிட்ஜ் சர்வதேச AS மற்றும் உயர் தர பரீட்சைகளில் உலகளாவில் பரீட்சைக்குத் தோற்றிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் இந்த வெற்றிபெற்ற பயிலுனர்கள் மிகச் சிறந்த பெறுபேறுகளை ஈட்டியுள்ளனர்.