இதற்குப் பின்னரும் இன்னுமொரு உயிரை பலிகொடுக்காத வண்ணம் அனைத்து தரப்பினரும் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சிக்கான அரசாங்கம் பல அழுத்தங்களைத் தாண்டி இதய சுத்தியுடன் செயற்படுகின்றது.
நேரடியாக அரச படைகளுடன் ஆயுதம் தாங்கி போரிட்ட போராளிகளே புனர்வாழ்வளிக்கப்பட்டு சகஜ வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்ற காலகட்டத்தில், போராட்டத்துடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் பல ஆண்டுகள் சிறையில் வாடுவது இயற்கை நீதிக்கு ஒத்துவரவில்லை என்பதனை தற்போதைய அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளது.
எனது நிலைப்பாடும் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என்பதேயாகும்.
மிகுந்த இடையூறுகளுக்கும், தீவிர போக்குடன் செயற்படும் தென்னிலங்கை குழுக்களின் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலும் இவ்விடயம் கொண்டு செல்லப்படுகிறது.
தாமதங்கள் ஏற்படுகின்றபோதிலும் தடைப்பட்டு இடைநடுவில் இம் முயற்சிகள் கைவிடப்படவில்லை.
எனவே பொறுமையை கடைப்பிடிக்குமாறு இளைஞர்களை நான் தயவுடன் வேண்டுகிறேன்.
இராஜேஸ்வரன் செந்தூரன் போன்றவர்கள் உருவாகிவிடக்கூடாது.
இளைஞர்கள் தமது இன்னுயிரை மாய்ப்பதற்குப் பதிலாக சாத்வீக வழிகளின் வாசலை திறந்து அதனூடாக இவ்விடயம் தொடர்பில் பயணிக்க முன்வரவேண்டும்.
வெகுவிரைவில் அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலையாகும் வண்ணம் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முஸ்தீபுகளை முன்னெடுப்பார்கள் என்பதில் நான் அதிகம் நம்பிக்கை கொண்டவனாக இருக்கின்றேன் என்பதனை தெரிவிப்பதோடு துயரத்தில் இருக்கும் தற்கொலை செய்து கொண்ட மாணவனது குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களை கூறுகின்றேன்.