இம்மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மோல்டா பிர்குவில் உள்ள போட்ஸ் சென் ஏஞ்சலோவில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன இன்று (26) மாலை மோல்டா சென்றடைந்தார்.
ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன அவர்களும் இன்னும் பல அதிகாரிகளும் இணைந்து கொண்டுள்ளனர்.
மோல்டா சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த பொதுநலவாய நாடுகளின் தற்போதைய தலைவரான ஜனாதிபதி அவர்களை மோல்டா நாட்டின் சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
நாளை (27) ஆரம்பமாகும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பதவியை மோல்டா நாட்டின் பிரதமர் ஜோசப் மஸ்கட் அவர்களிடம் கையளிக்க உள்ளார்.
இதே நேரம் மோல்டா நாட்டின் நிதி அமைச்சர் எட்வட் சீக்லுனா அவர்கள் பொதுநலவாய நாடுகளின் சிறிய உறுப்பு நாடுகளுக்கு வர்த்தக நிதி வசதிகளை வழங்குவதற்கான ஒரு புதிய பொதுநலவாய நிதி முன்னெடுப்பு குறித்து அறிவிப்பு செய்தார்.
இலங்கை , இந்தியா, மொரிசியஸ் மற்றும் மோல்டா ஆகிய நான்கு நாடுகள் இந்த முன்னெடுப்பில் இணைந்துகொண்டுள்ளன.
இந்த நடவடிக்கை 2013ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட கோட்டே அறிக்கையில் செய்யப்பட்ட முன்மொழிவுகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிக்லுனா தெரிவித்தார்.
நிதி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான செயன்முறை நடைவடிக்கைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென இந்த அறிக்கை முன்மொழிந்துள்ளது. இது பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கும் சிறிய நாடுகள் எதிர்நோக்கும் வர்த்தக ரீதியான தடைகளை வெற்றிக்கொள்வதை நோக்கமாகக் கொண்டதாகும்.
வளர்ந்துவரும் சந்தை வர்த்தக நிதித்துறையில் உள்ள முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு செயற்குழு பொதுநலவாய வர்த்தக நிதி வசதியை அபிவிருத்தி செய்து நடைமுறைப்படுத்துவதற்கான சாத்திய வளங்களை மதிப்பீடு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இது 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதேநேரம் 53 உறுப்பு நாடுகளைக் கொண்ட பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான அபேட்சகர்களை பரிசீலனை செய்து வருகின்றது.
2015ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுடன் கலாநிதி கமலேஷ் சர்மாவின் பதவிக் காலம் நிறைவு பெறுகின்றது.
இதேநேரம் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் பொதுநலவாய வெளிநாட்டு அமைச்சர்களின் மாநாடு மற்றும் வர்த்தக மன்றம் ஆகியவற்றில் பங்குபற்றினர்.