மலையக மக்களுக்கு காணி பெற்றுக்கொடுக்கவே சம்பளப்பிரச்சினை உள்வாங்கப்படவில்லை
மலையக மக்களுக்கான காணி பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற் காகவே வரவு செலவுத் திட்டத்தில் சம்பளப் பிரச்சினை உள்வாங்கப்படவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மலையக மக்களுக்கு தனிக் காணிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் நிதியமைச்சர் இந்த கருத்தினை வெளியிட்டார்.
இந்த நிலையில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் ஊடாக பாரிய முதலீடொன்றை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். இந்த திட்டத்தின் ஊடாக மக்களுக்கு ஓர் இடத்திலிருந்து உரிய வகையிலான சேவையினை வழங்க முடியுமென அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஊழல், மோசடி என்பவற்றை கட்டுப்படுத்தக்கூடியதாக இந்தத் திட்டம் அமையுமென நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகளை கண்டே தமக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். எனினும் 225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 10 பேரால் கொண்டுவர ப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை கண்டு தான் அச்சம் கொள்ளப்போவதில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்தார்.