20042025Sun
Last update:Tue, 07 Jan 2025

பெற்றுக்கொண்ட அதிகாரத்தை சரியாக நடைமுறைப்படுத்துவதே மிகவும் கடினம்

ranil wickramasinghe Nov26அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது இலகுவான விடயம். ஆனால் பெற்றுக்கொண்ட அதிகாரத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதே மிகவும் கடினமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தினேஷ் வீரக்கொடி எழுதிய ‘கிரேட் நவம்பர் ரெவலியூஷன்’ என்ற புத்தக வெளியீடு நேற்றுமுன்தினம் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற் றுவதை மனதில் வைத்துக்கொண்டு செயற்படவேண்டியது அவசியமானது. நாம் இதற்கான ஆரம்பத்தையே தற்பொழுது ஏற்படுத்தியி ருப்பதாக கூறினார்.

ஆரம்பித்திருக்கும் இந்தப் பயணம் இன்னும் நீண்டதூரம் தொடரவேண்டியுள்ளது. நல்ல தொரு ஆரம்பம் என்பதால் பயணம் வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

எனினும் அரசாங்கத்தின் இந்தப் பயணத்தைக் குழப்புவதற்கு சிலர் இருக்கின்றனர்.

இருந்தாலும் நாம் மீண்டும் பழைய நிலைக்குச் செல்லவதற்கு இடமளிக்கப் போவதில்லை. நாம் தற்பொழுது புதிய பாதையிலேயே பயணித்து வருவதாக பிரதமர் தனது உரையில் கூறினார்.

கடந்தகாலம் என்பது முடிந்துவிட்டதொன்று.

1956ஆம் ஆண்டில் இடம் பெற்றவை முடிந்துவிட்டன. 1977இல் இடம்பெற்றவையும் முடிந்துவிட்டன. 2015ஆம் ஆண்டு ஜனவரி புதியதொரு பயணம் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் பயணத்தின் ஊடாக புதிய உலகத்துக்கு எவ்வாறு முகங் கொடுப்பது என்பதையே தற்பொழுது சிந்திக்கவேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நிலைமையைத் தொடர்ந்தும் பாதுகாத்துச் செல்வதே எமக்கு முன்னால் காணப்படும் பாரிய சவாலாகும். இதற்கு அடுத்தது மக்கள் எதிர்பார்க்கும் கொள்கைகளைப் பெற்றுக்கொடுப்பது.