வற் (VAT) வரி திருத்தத்தால், நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு அமைய, இது வரை தனிப் பெறுமானமாக இருந்த வற்வரி, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் அடிப்படையில் அத்தியவசியமான பல்வேறு பொருட்களின் விலைகள் குறைவடையும் எனவும் அத்தோடு, நீர், மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு துறைகளில் எவ்வித கட்டண அதிகரிப்பும் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் வற் வரி திருத்தம் காரணமாக நீர், மின்சாரம், தொலைபேசி போன்ற சேவைகளுக்காக, நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் கட்டணங்கள் அதிகரிக்கும் என பல்வேறு தரப்பினர் குறிப்பிடும் அறிக்கைகளில் எவ்வித உண்மையுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வரை 11% எனும் தனி பெறுமானமாக அறவிடப்பட்ட வற் வரி வரவு செலவுத் திட்டத்தின் பின்னர், 0%, 8%, 12.5% என மூன்று பிரிவுகளாக அறவிடப்படவுள்ளது.
அத்துடன் மொத்த மற்றும் சில்லறை வியாபாரம், வற் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருட்களின் விலைகள் யாவும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்தியவசியமான பொருட்களுக்கு மேலதிகமாக ஏனைய அனைத்து பொருட்களினதும் விற்பனை விலை, சந்தையில் குறைவடைய வேண்டும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், அரசாங்கத்தின் கீழ் இயங்கும் அத்தியவசிய சேவைகளான நீர் வழங்கல், மின்சாரம், தொலைத் தொடர்பு சேவைகளும் இவ்வாறு வற் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், சேவை வழங்குதல் தொடர்பில், நுகர்வோர் மீது எவ்வித வற் வரியும் அறிவிடப்படமாட்டாது எனவும் இதனால் எவ்வித கட்டண அதிகரிப்பும் இடம்பெறாது என நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் தேசயி உற்பத்திகள் தொடர்பில் இதுவரை அறவிடப்பட்டு வந்த 11% வற்வரி, 8% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலைகளும் எதிர்வரும் நாட்களில் குறைவடையும் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.