நாட்டில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கடந்த 10 மாதங்களுக்குள் புதிய அரசு மேற்கொண்ட அர்ப்பணிப்பு ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் திருமதி சமந்தா பவரின் பாராட்டை பெற்றுள்ளது.
இலங்கை வந்துள்ள திருமதி சமந்தா பவர் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றார்.
நல்லிணக்க வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது புதிய அரசு மிகுந்த நம்பிக்கையுடனும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட தூதுவர் அவர்கள், இவ்வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கும் நிறுவனங்களுக்குமிடையிலான உறவு மேலும் விரிவுபடுத்தப்பட முடியுமாயின் சிறந்ததெனக் சுட்டிக் காட்டினார்.
நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சீர்திருத்தங்களை தான் பாராட்டுவதாக குறிப்பிட்ட திருமதி சமந்தா பவர், அதன் மூலம் நாட்டில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் உள்ள தலைவர்கள் பெரும்பாலும் அதிகாரத்தை தனதாக்கிக் கொள்ள முயற்சிக்கும் அதேவேளை, இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அதிகாரத்தை விட்டுவிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதை தான் பாராட்டுவதாக குறிப்பிட்டார். அவ்வாறே இது ஏனைய உலக தலைவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகுமென அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய அரசியல் மறுசீரமைப்புக்களின் ஊடாக சந்தேகம் இன்றி பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியுமெனக் குறிப்பிட்ட தூதுவர் அவர்கள், அதன்மூலம் ஒளி விளக்காக மிளிருவதற்கு முடியுமெனத் தெரிவித்தார்.
இலங்கையின் புதிய வேலைத்திட்டம்பற்றி சர்வதேச சமூகம் மிக ஆர்வத்துடன் இருப்பதாக தூதுவர் அவர்கள் குறிப்பிட்டார்.
இலங்கையின் நல்லிணக்க வேலைத்திட்டத்தை வெற்றிகொள்ளச் செய்வதற்கு அமெரிக்க அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பினை ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பாராட்டினார். இந் நல்லிணக்க செயன்முறையானது, உண்மையை ஆராய்தல், இழப்புக்களை ஈடு செய்தல், நியாயம் வழங்குதல், மீண்டும் அவை ஏற்படுவதை தடுத்தல் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீண்டகாலமாக நெருக்கடிக்குள்ளாகி உள்ள நாடு என்ற ரீதியில் இவ்வாறான செயற்பாடுகளின்போது பல்வேறு கருத்துக்களைக்கொண்ட குழுக்களுடன் பணியாற்ற வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், அங்கு மேலெழும் கருத்துக்களுக்கிடையே முரண்பாடுகள் நிலவுவதாகவும் அதன்போது அரசு என்ற ரீதியல் மிகவும் பொறுமையாக பணியாற்றும் பொறுப்பு புதிய அரசுக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் சுதந்திரத்தை உறுதி செய்தல், ஜனநாயகத்தை வலுப்படுத்தல், வறுமையை ஒழித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கடந்த 10 மாதங்களுக்குள் அரசு மேற்கொண்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும் இங்கு ஜனாதிபதி அவர்களினால் தூதுவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியைச் சுற்றி குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை பாராளுமன்றத்திடமும் சுயாதீன ஆணைக்குழுக்களிடமும் பகிர்ந்தளிக்க முடிந்துள்ளதென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
நல்லிணக்க வேலைத்திட்டத்தை அடைந்துகொள்வதில் இலங்கை மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்புப்பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், வடக்கில் காணிகளை விடுவித்தல், மீளக் குடியமர்த்துதல் ஆகிய நடவடிக்கைகள் போன்றே, மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றியும் அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக குறிப்பிட்டார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கல சமரவீர, வெளிநாட்டலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ஒஸ்டின் பெர்னாந்து ஆகியோரும் இதன்போது சுருக்கமாக விளக்கமளித்தனர்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் திரு.அத்துல் கேசாப் அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றார்.