23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா முன்வரவேண்டும்

tkn 11 24 mf 07 ndkசமந்தா பவரிடம் தமிழ்க் கூட்டமைப்பு வேண்டுகோள்

ஜெனீவாவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கையில் முழுமையாக நடைமுறைப்படுத்த அமெ ரிக்கா உதவ முன்வர வேண்டு மென தமிழ் தேசியக் கூட்ட மைப்பு அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக் கான தூது வர் சமந்தாபவரிடம் வலியு றுத்தியுள்ளது.இதேவேளை தமிழ் பேசும் மக்களுக்கு போதிய அதிகாரங்களுடன் கூடிய நியாயமான அரசியல் தீர்வு கிடைக்க அமெரிக்கா தலையிட்டு வழிசமைக்க வேண்டுமெனவும் கூட்டமைப்பு பவரிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் சமந்தா பவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்களாக நடைபெற்ற இந்த சந்திப்பின் பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே கூட்டமைப்பின் சார்பாக சமந்தாபவரிடம் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் வலியுறுத்தல்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

“இந்த சந்திப்பு மிகவும் திருப்திகரமாக அமைந்தது. தமிழ் மக்கள் சார்பில் பேச வேண்டிய அனைத்து விடயங்ககளையும் நாம் சமந்தாபவரிடம் வலியுறுத்திக் கூறினோம்” என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

இதில் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டுமென்பதே எமது முக்கியமான கோரிக்கையாக விருந்தது.

இந்த தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டுமாயின் அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையும் தங்களது கடமைகளை முறையாக முன்னெடுக்க வேண்டும். அவர்களின் உதவி எமக்கு அவசியம் என்பதனை நாம் பவரிற்கு தெளிவாக எடுத்துரைத்தோம் என்றும் சம்பந்தன் கூறினார்.

எமது சந்திப்பில் அரசியல் தீர்வு குறித்தும் பேச்சு நடத்தினோம். தமிழ் பேசும் பிரதேசங்களிலுள்ள தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டில் கெளரவமாகவும் சுயமரியாதையுடனும் உரிமையுடனும் வாழக்கூடிய வகையில் அவர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்.

 அத்துடன் மட்டும் நின்று விடாமல் அது நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வாகவும் நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வாகவும் இருக்க வேண்டியது அவசியம் என்பதனையும் அமெரிக்காவின் ஐ.நா. பிரதிநிதிக்கு நாம் சுட்டிக்காட்டியுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் பேசும் மக்களுக்கு போதிய அதிகாரங்கள் கிடைக்க வேண்டுமென கூட்டமைப்பு சமந்தாவிடம் கேட்டுக்கொண்டதாகவும் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

இவற்றைத் தவிர தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினை, கைதிகளின் விடுதலை, இராணுவ பிரசன்னத்தை குறைத்தல், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வீடில்லா பிரச்சினை, தொழில்வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து கஷ்டங்கள் குறித்தும் சமந்தாபவரிடம் கூட்டமைப்பு விரிவாக விளக்கமளித்துள்ளது.

இராணுவ பிரசன்னத்தினால் தமிழ் மக்கள் அசெளகரியத்தை எதிர்நோக்குவதுடன் கெளரவமற்ற நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார்கள். அதனை தவிர்க்க அமெரிக்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் கூட்டமைப்பு பவரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இச்சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.