சகல துறைமுகங்களும் வர்த்தக கப்பல் சேவைகளுக்காக திறப்பு
கோல்ட் டயலொக் மாநாட்டில் பிரதமர்
எந்த ஒரு நாட்டினதும் கடற்படை தளத்தை இலங்கைக்குள் அமைக்க ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள அனைத்து துறைமுகங்களும் வர்த்தக கப்பல் சேவைகளுக்காக திறக்கப் பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சமுத்திர மற்றும் கடல் வழி பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆராயும் காலி பேச்சுவார்த்தை “கோல் டயலொக்” என்ற சர்வதேச கடல்சார் பாதுகாப்பு தொடர்பான இரண்டு நாள் மாநாடு நேற்று (23) காலி லைட் ஹவுஸ் ஹோட்டலில் ஆரம்பமானது.
“பாரிய சமுத்திரவியல் ஒத்துழைப்பு மூலம் கடல்களை பேணி பாதுகாத்தல்: அதன் சவால்கள் மற்றும் முன்னேற்ற வழி முறைகள்”(Secure Seas through Greater Maritime Cooperation: Challenges and Way Forward) என்ற தொனிப் பொருளில் இரண்டு நாட்கள் நடைபெற வுள்ள இந்த சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன் பிரதான உரை நிகழ்த்தினார்.
தற்போது சர்வதேச கடற் பாதைகளில் இந்து சமுத்திர கடல் வழி பாதைகள் அரைவாசிக்கும் மேலுள்ளன. ஹைட்ரோ காபன் வளங்கள் தொடர்பான உலகளாவிய வர்த்தகத்தில் இரண்டில் ஒன்று முதல் மூன்றில் இரண்டு வரை இந்த பாதைகள் மூலமே இடம்பெறுகின்றன. அத்துடன் உலக கப்பல் சேவைகளில் மூன்றில் ஒரு பகுதி இந்த கடல்வழி பாதைகள் மூலமே இடம்பெறுகின்றன. சரியாக சொல்வதானால் உலக பொருளாதார இயந்திரத்திற்கு தேவையான எண்ணெய், நிலக்கரி, எரிபொருள் ஆகியவை இந்தப் பாதைகள் மூலமே கொண்டு செல்லப்படுகின்றன.
ஐரோப்பிய யூனியன், சீனா, ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய நாடுகளுக்கு இந்து சமுத்திர கடல் பாதைகள் முக்கியமானவை, இந்த பாதைகள் மூலமான வர்த்தகம் பாதிக்கப்பட்டால் மேற்படி நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்றும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இந்த பாதைகளின் வர்த்தகம் பாதிக்கப்பட்டால் மேற்படி நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். அம்பாந்தோட்டை துறைமுகம், முத்துமாலை கொள்கை ஆகியவை இப்பிராந்தியத்தில் சீனாவின் மென்மையான இராஜதந்திரத்தையிட்டு ஏனைய நாடுகளை கரிசனை கொள்ள வைத்திருக்கிறது. அதேவேளை, சர்வதேச பயங்கரவாதம் காரணமாக இந்து சமுத்திரத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
ஹோர்முஸ் மற்றும் பபெல் மென்டெட் நீரிணைகள் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய முக்கிய இடங்களாகும். உலக பொருளாதாரத்திற்கு தேவைப்படும் எரிபொருளை ஏற்றுவதில் இந்த இடங்கள் முக்கிய இடங்களாகும்.
இந்த நிலையில் இந்து சமுத்திரத்தில் சுதந்திரமான கப்பல் சேவையை நடத்திச் செல்வதற்கு அதனுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்து சமுத்திரத்தில் இவ்வாறான சுதந்திரக் கப்பல் சேவை நடத்திச் செல்வதற்கு அமெரிக்க கடற் படையின் பங்களிப்பு தேவையானது என்பதை இலங்கை உணர்ந்துள்ளது.
இந்து சமுத்திரத்தில் பூகோள ரீதியாக இலங்கையின் அமைப்பானது விசேடமானது. இந்து சமுத்திர கடல் வர்த்தகம் எமது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் பெறுகிறது. இதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழான இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார செற்பாடுகள் இந்தியா.
பாகிஸ்தான் உள்ளிட்ட வங்காள விரிகுடா நாடுகள், ஐரோப்பிய யூனியன் மற்றும் சீனா ஆகியவற்றின் இரு தரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உடன்படிக்கையை சார்ந்தே உள்ளது. அத்துடன் அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு தொடர்பாக பேச்சு நடத்தும் திட்டமும் உள்ளது.
கப்பற் போக்குவரத்து மீதான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எந்தவொரு நாடும், அது எவ்வளவு முன்னேறிய நாடாக இருந்தாலும் தனித்து நின்று கையாள முடியாது. கூட்டுறவு செயற்பாடுகள் மூலமே அவ்வாறான அச்சுறுத்தல்களையும் சவால்களையும் முறையாக சமாளிக்க முடியும்.
இலங்கையை சுற்றியுள்ள கடலுடன் எமது எதிர்காலம் தொட்புபட்டுள்ளது. கடல் தொடர்பான சட்டங்கள் மற்றும் நிலைப்பாடுகள் பின்பற்றுவதன் மூலம் முன்னேறுவதற்கு நாம் இணக்கம் தெரிவிக்க வேண்டும். கடலில் சுதந்திரமான நடமாட்டத்தை மேற்கொள்வதை நாம் உறுதி செய்ய வேண்டும். அதற்கு கூட்டுறவு நடைமுறை அவசியமாகிறது. அவ்வாறு இல்லாமல் நாம் இங்கு பேசும் விடயங்களுக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கப் போவதில்லை.
வரலாற்று ரீதியாக வங்காள விரிகுடா தொடர்பாக இலங்கை எப்பொழுதும் அக்கறை காட்டி வந்திருக்கிறது. இலங்கையின் பொருளாதார வலயம் இந்த பிராந்தியத்திற்குள் தான் வருகிறது. எனவே எமது நாட்டை சுற்றியுள்ள கடற் பகுதியில் சர்வதேச பயங்கரவாதம், நாடுகளுக்கு இடையிலான குற்றச் செயல்கள் மற்றும் ஆட்கடத்தலை தடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது, எனவே, நாட்டின் பாதுகாப்பு வலைப் பின்னலில் கடல் பிரதேசம் கேந்திர முக்கியத்துவம் வகிக்கிறது.
இப்பிரதேசத்தின் கடல் பாதுகாப்பு மேலும் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படை மற்றும் விமானப் படையின் திறனை ஒன்றுபடுத்தும் சாத்தியக்கூறு பற்றி நாம் கருத்திற் கொண்டுள்ளோம். இவ்விடயத்தில் நாட்டின் கடற்கொள்கையை ஒட்டுமொத்தமாக அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகளில் அக்கறை செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த விடயம் சம்பந்தமாக நாட்டின் பிதா எனக் கருத்தப்படும் டீ. எஸ். சேனநாயக்காவின் கனவின் படி கடலில் உலாவும் சிறிய கடற் படையை உருவாக்கும் யோசனை பற்றி இலங்கை மீளாய்வு செய்யலாம். எனினும் தேசப்பிதாவின் மேற்படி கனவு அவரை அடுத்து பதவிக்கு வந்த அடுத்தவரினால் கொள்கை ரீதியாக மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரத்தை ஒரு சமாதான வலயமாக்க இலங்கை முன்வர வேண்டும் என்று கூறப்பட்டதன் காரணமாகவே இந்த கொள்கை மாற்றம் இடம்பெற்றது.
எனினும் தற்பொழுது கடற் பிரதேசங்களில் ஏற்பட்டு வரும் பயங்கரவாத சூழ்நிலை காரணமாக மீண்டும் அந்த யோசனைக்கு உயிரூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
கடற் படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, சட்டமும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார, பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, இந்தியாவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் அருன் பிரகாஷ், இந்தியாவின் தற்போதைய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர். கே. தோவான், இலங்கையின் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலக்க, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள, பங்களாதேஷ் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் எம். பரிப் ஹபீப், நைஜீரிய கடற்படைத் தளபதி ஐ. இ. இபாஸ் உட்பட 37 நாடுகள் மற்றும் 10 சர்வதேச அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தி உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கடல் மற்றும் சமுத்திரவியல் துறை சார்ந்த புத்திஜீவிகள் பலர் கலந்து சிறப்பிக்கின்றனர்.