இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தாய்லாந்தின் துணைப் பிரதமர் விஷானு கிரயா -நகாம் (Wissanu Krea-ngam) அவர்கள் நேற்று (18) மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஜனாதிபதி அவர்கள், தாய்லாந்தில் மேற்கொண்ட விஜயத்துடன் இணைந்ததாக மஹியங்கனை ரஜமகா விஹாரையில் இருந்து கொண்டு வரப்பட்ட புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி தாய்லாந்தில் இடம்பெற்றதுடன், அப்புனித சின்னங்களை இலங்கைக்கு கொண்டுவரும் முகமாக தாய்லாந்தின் துணைப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
தாய்லாந்தின் புத்தசாசன மற்றும் நீதி அமைச்சுப் பொறுப்புக்களை தாய்லாந்தின் துணைப் பிரதமர் அவர்கள் வகிக்கின்றார்.
ஜனாதிபதியும் தாய்லாந்தின் துணைப் பிரதமரும் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டதுடன், தேரவாத பௌத்த சிந்தனை பின்பற்றப்படும் நாடுகள் என்ற வகையில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான பௌத்த மத உறவுகளை மேலும் விருத்தி செய்வது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.
இரு நாடுகளுக்குமிடையிலான கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் விரிவுபடுத்தி எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமிடையே கலாசார மற்றும் வர்த்தக பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றார்.