17072024Wed
Last update:Wed, 08 May 2024

நல்லாட்சி அரசின் முதலாவது பட்ஜட் நாளை

tkn 11 19 nt 03 ndk2016 வரவு செலவுத் திட்டத்தினூடாக 10 அத்தியாவசியப் பொருட்களை நிவாரண விலையில் வழங்கவும் ஏற்கெனவே வழங்கிய நிவாரணங்களை தொடர்ந்து அளிக்கவும் இருப்பதாக விசேட செயற்திட்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

 வறிய மக்களின் வாழ்க்கைத் தரம், பாவனை போக்கு என்பவற்றை பாதுகாக்கும் வகையில் நிவாரண பொதியொன்று வழங்கப்பட உள்ள அதேவேளை வறிய மக்களை பாதிக்காத வகையில் இலகுவான வரி முறை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இது குறித்து தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஐ. தே. க., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்த தேசிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டமான இது நாளை பிற்பகல் 2.00 மணிக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் இம் முறை வரவு செலவுத் திட்டத்தில் சுதந்திக் கட்சியின் ஆலோசனைகளும் உள்ளடக்கப்பட்டுள் ளதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் சரத் அமுனுகம மேலும் கூறியதாவது,

மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிக்கப்படுகிறது. கடந்த வருடம் வழங்கிய நிவாரணங்கள் இம்முறையும் வழங்கப்பட உள்ளன. அரச ஊழியர்களின் சம்பளம் கடந்த முறை அதிகரிக்கப்பட்டது. ஓய்வூதியகாரர்களின் கொடுப்பனவு உயர்த்தப்பட்டது. பல்வேறு துறையினருக்கும் நிவாரணம் வழங்கப் பட்டது. வரிகள் குறைக்கப்பட்டு வாழ்க் கைச் செலவு குறைக்கப்பட்டது. சர்வதேச பிரச்சினைகளினால் எமது நாட்டிற்கும் சில நெருக்கடிகள் ஏற்பட்டன.

2016 வரவு செலவுத் திட்டம் தேசிய சர்வதேச பொருளாதார நிலைகளை கருத்திற்கொண்டே அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடி மேலைத்தேய நாடுகளை பாதித்துள்ளன.

மத்திய கிழக்கு பிரச்சினையும் பொரு ளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வரவு செலவுத் திட்டத்தினூடாக சில இலக்குகளை நோக்கி செல்ல வேண்டி யுள்ளது.

கடந்த 10 வருட காலத்தில் எமது ஏற்றுமதி வீழ்ச்சி கண்டது. இதற்கு தேசிய மற்றும் சர்வதேச காரணிகள் காரணமாக அமையலாம். இது தொடர்பில் இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக கவனம் செலுத்தப்படும். மீன்பிடி, ஆடைத்தொழிற் துறை, என்பவற்றினூடாக கூடுதல் வெளிநாட்டு செலாவணி கிடைத்தது. 70 வீதத்திற்கு மேல் எமது ஏற்றுமதிகள் மேலைத்தேய நாடுகளுக்கே செல்கின்றன. ஏற்றுமதித் துறையில் ஆசிய நாடுகளுக்கு குறைந்தளவு பங்களிப்பு காணப்படுகிறது. சந்தை நிலவரத்தை துரிதமாக மாற்ற முடியாது.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் எமது கருத்துரையும் உள்ளடக்கப்பட்டுள்ளன. கடந்த முறை வழங்கிய சலுகைகளை இம்முறையும் வழங்க ஜனாதிபதி முன்னுரிமை வழங்கியுள்ளார். 10 அத்தியாவசிய பொருட்கள் சலுகை அடிப்படையில் வழங்க திட்டமிடப் பட்டுள்ளது.

வறிய மக்களின் வாழக்கைத்தரம், பாவனை போக்கு என்பவற்றை கருத்திற்கொண்டு சலுகை வழங்கப் படும். மொத்தத் தேசிய உற்பத்தியில் கிடைக்கும் வருமான வீதம் குறைவடைந் துள்ளது. வரி அறவீடு தொடர்பில் விசேட முறை அமுல்படுத்தப்படும் வறிய மக்கள் மீது சுமை ஏற்றாத வகையில் இது மேற் கொள்ளப்படும். எமது உத்தேச வருமானம் 1993 பில்லியன்களாக உள்ள போதும் செலவு 3450 பில்லியனாக இருக்கிறது. இந்த நிலையை மாற்றி வருமானத்தை அதிகரிக்க வேண்டும். வரி அறவிடுகையில் வறிய மக்களுக்கு பாதிப்பில்லாதவாறு மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவுறுத் தியுள்ளார்.

கல்வி, சுகாதாரம், கிராமிய அபிவிருத்தி தொழில் வாய்ப்பு என்பன தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

முன்பு நெல் உற்பத்தி தொடர்பான பிரச்சினை இருந்தது. இன்று அறுவடை களை விற்பது தொடர்பான சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலதிகமாக உள்ள நெல் மக்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனி, மா பாவனை தொடர்பில் எதிர்காலத்தில் முடிவு எடுக்க வேண்டும்.

நெல் உற்பத்தி கூடுதலாக உள்ள நிலையில் கோதுமை மா பாவனையை குறைப்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.

மொத்தத் தேசிய உற்பத்தியில் துண்டு விழும் தொகை 6.8 வீதமாக உள்ளது அடுத்த வருடத்தில் அதனை 6.1 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2020 அதனை 3.2 ஆக குறைப்பதே எமது இலக்காகும்.

வரி அறவிடுவதற்காக விசேட முறைமையொன்று அறிமுகப்படுத் தப்படும்.

மக்கள் மீது சுமையேற்றாத வகையிலும் அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்த முறைமை மேற் கொள்ளப்படும் வரி அறவீட்டினூடாக பொருளாதாரத்திற்கு கிடைக்கும் பங்களிப்பு பலவீனமாகவே இருக்கிறது. எமது நாட்டுக்கு உகந்த பொருளாதார வழி முறையை செயற்படுத்துவதற்கு ஏற்றவாறு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது என்றார்.

எளிமையான வரி முறையொன்றை அறிமுகப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். நாட்டில் சுமார் 30 வகையாக வரி வகைகள் செயற்படுத்தப் படுகின்றன.

இம்முறை வரவு செலவுத் திட்டத் தினூடாக எரிபொருள் விலைகள் குறைக் கப்படுமா என்பது குறித்து கூற முடியாது. ஆனால் எரிபொருள் விலை குறைப்பின் உச்ச நன்மையை பொதுமக்களுக்கு வழங்குவதென அரசாங்கம் கொள்கை ரீதியில் முடிவு செய்துள்ளது.

உலகில் பிரதான எரிபெருள் விநியோக நாடுகளான ரஷ்யா மற்றும் ஈரான் என்பவற்றின் பிரதான வருவாயை குறைக்கவே சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டன. ஏனைய நிதி அமைச்சர்களை விட தற்போதைய நிதி அமைச்சர் பாக்கியசாலி ஆவார்.

ஏனெனில் அமைச்சு ஆசனத்தில் அமர்கையில் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைந்தது.