அரச உயர்மட்ட கூட்டத்தில் தீர்மானம்
* 99 கைதிகள் விருப்பம்
* 85 பேரின் கோரிக்கை சாதகமாக பரிசீலிப்பு
* 10 நாட்களுக்குள் முதற்கட்டப் பணி
புனர்வாழ்வு பெறுவதற்கு விருப்பம் தெரிவித்த தமிழ் அரசியல் கைதிகளில் முதற்கட்டமானவர்கள் எதிர்வரும் பத்து நாட்களுக்குள் புனர்வாழ்வுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்றுத் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார். புனர்வாழ்வு பெறுவதற்கு விருப்பம் தெரிவித்த 85 பேருடைய கோரிக்கைகளை சாதகமாகப் பரிசீலிப்பதாகவும், முதற்கட்டக் குழுவினரை 10 நாட்களுக்குள் புனர்வாழ்வுக்கு அனுப்பி வைப்பதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் உறுதிமொழி வழங்கியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நேற்றைய கூட்டத்தில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பிரதமரின் செயலாளர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டமாஅதிபர் திணைக்களத்தின் உயரதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் வெலிக்கடை மகசின் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளிடம் தெரிவித்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்,
மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்களில் 99 பேர் புனர்வாழ்வு பெற்றுச் செல்வதற்கு விருப்பம் தெரிவித்து கடிதம் வழங்கியுள்ளனர். இவர்களில் 14 பேர் ஏற்கனவே தண்டனை பெற்றவர்கள் என்பதால் எஞ்சிய 85 பேருடைய புனர்வாழ்வுக் கோரிக்கையை சாதகமாகப் பரிசீலிப்பதற்கு தயார் என சட்டமா அதிபர் திணைக்களம் கூறியுள்ளது.
அத்துடன் புனர்வாழ்வுக்கு அனுப்பும் செயற்பாடுகளை இன்றுமுதல் ஆரம்பித்து பத்து நாட்களுக்குள் அவர்களை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைதிகளின் விடயத்தை சட்டமா அதிபர் திணைக்களம் சாதகமாகப் பரிசீலித்துள்ளமை தொடர்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கைதிகளிடம் நேரில் சென்று தெரிவித்ததாகவும் கூறினார். அரசாங்கத்தின் இந்த உறுதிமொழி தொடர்பில் தமக்குள் ஆராய்ந்து முடிவை சிறைச்சாலைகள் ஆணையாளருக்குத் தெரிவிப்பதாக கைதிகள் தம்மிடம் சுட்டிக்காட்டியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேநேரம், உண்ணாவிரதமிருந்த கைதிகளின் உடல்நிலையில் சோர்வு காணப்படுகின்றபோதும் எவரும் ஆபத்தான கட்டத்தில் இல்லையென்றும் அவர்களுக்கு தான் ஏற்கனவே உத்தரவிட்டதற்கமைய சேலைன் வழங்கப்படுவதாகவும் கூறினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அரசாங்கம் ஏற்கனவே வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இதுவரை 39 பேரை பிணையில் விடுவித்துள்ளது. கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் 62 பேரை விடுவிப்பதாக உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை 39 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீதவான் நீதிமன்றத்தில் வழக்குள்ளவர்களுக்கு இனி பிணை வழங்க முடியாது என்றும், எஞ்சியவர்களை மேல்நீதிமன்றத்தில் வழக்குள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் புனர்வாழ்வுக்கு விருப்பம் தெரிவித்தவர்களில் முதற்கட்டமானவர்கள் இன்றுமுதல் பத்து நாட்களுக்குள் அதாவது எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள் என்ற உறுதிமொழி சட்டமாஅதிபர் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வுக்குத் தயார் என அறிவித்தும் அரசாங்கம் எதுவித பதிலும் வழங்கவில்லையென்றே கைதிகள் கூறிவந்தனர். இந்த நிலையில் அரசாங்கம் உறுதி மொழியொன்றை வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் ஏற்கனவே வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றியிருக்கும் நிலையில் தற்பொழுது வழங்கியிருக்கும் உறுதிமொழியை நிறைவேற்றாவிட்டால் என்ற யூகத்தில் சொல்லவிரும்பவில்லை யென்றும் அவர் கூறினார்.
சீ.வி. விக்னேஸ்வரன்
தமிழ் அரசியல் கைதிகளுக்கு முழுமையான புனர்வாழ்வொன்றை வழங்கி அவர்களை சிறையிலிருந்து விடுவிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக வடமாகாணசபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளால் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் ஒற்றுமைப் பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், கைதிகளின் விடுதலைக்காகப் போராடவேண்டிய பொறுப்பு வடக்கு, கிழக்கு மக்களுக்கு உண்டு என்பது அண்மைய ஹர்த்தால் மூலம் உணர்த்தப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் நேற்றையதினம் 9வது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளை நேற்றுச் சென்று பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.
கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் சகலரையும் உங்களின் பால் ஈர்த்துள்Zர்கள். இதனாலேயே அண்மைய ஹர்த்தால் வெற்றியளித்தது. எனவே உங்களின் பிரச்சினைக்காக போராடுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என்ற விடயத்தை தான் கைதிகளிடம் எடுத்துக் கூறியிருந்ததாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கைதிகளின் விவகாரம் தொடர்பில் உயர் மட்டங்களில் பலதரப்பட்ட கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. இந்தக் கருத்துப் பரிமாற்றங்களில் எட்டப்படுகின்ற தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே நாம் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றித் தீர்மானிக்க முடியும்.
நாளையதினம் (இன்று) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கூடி கைதிகள் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராயவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு முழுமையாக பொதுமன்னிப்புக் கொடுக்க முடியாது எனக் கருதும் நிலையில் அவர்களின் குற்றங்களை மனதில் எடுத்து அவர்களுக்குப் புனர்வாழ்வளித்து அவர்களை சிறையிலிருந்து விடுவித்து நன்மையை ஏற்படுத்துவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் வடமாகாணசபை அமைச்சர்கள் நால்வரும் கைதிகளைச் சந்தித்திருந்தனர். அன்றையதினம் எனக்கு சந்திக்க முடியாது போனது. எனவேதான் இன்று (16) நான் அவர்களைச் சந்தித்திருந்தேன். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலைன் வழங்கப்பட்டுள்ளது. கைதிகள் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார்கள் என்றே தான் கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.