17072024Wed
Last update:Wed, 08 May 2024

கைதிகளை ஒரேயடியாக விடுவிப்பதில் சிக்கல்கள்

tkn maithri pgi 5படிப்படியான நடவடிக்கைகள் முன்னெடுப்பு; சி.வி., வடமாகாண மைச்சர்களிடம் ஜனாதிபதி உறுதி

தமிழ் அரசியல் கைதிகள் சகலரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றபோதும், சகலரையும் ஒட்டுமொத்தமாக விடுவதில் அரசியல்சார்ந்த விடயங்கள் இருப்பதால் படிப்படியாக விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க ப்படுமென ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று தன்னைச் சந்தித்த வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாணசபை அமைச் சர்களிடமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உறுதிமொழியை வழங்கி யுள்ளார். முதலமைச்சருடன் மாகாணசபை அமைச்சர்களான டெனீஸ்வரன், டொக்டர் பி.சத்தியலிங்கம், ரி.குருகுலராஜா மற்றும் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

நேற்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமான இச்சந்திப்பு பிற்பகல் 12.45 மணிவரை நீடித்ததாக இதில் கலந்துகொண்டிருந்த வடமாகாணசபை அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்தார். வடமாகாணத்தின் அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டபோதும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற மனதளவான நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருக்கின்றார்.

எனினும், ஒட்டுமொத்தமாக சகலரையும் விடுவிப்பதில் அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டியதாக டெனீஸ்வரன் தெரி வித்தார். கைதிகளின் விடுதலைக்கான காலத்தை ஜனாதிபதி தீர்க்கமாகக் கூறியிருக்கவில்லை.

இருந்தபோதும் எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் அடங்கிய அறிக்கையொன்று சட்டமாஅதிபர் திணைக்கள அதிகாரிகளால் தன்னிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அந்த அறிக்கை கிடைத்ததும் படிப்படியாக கைதிகளை விடுவிப்பது தொடர்பில் முடிவொன்றை எடுப்பதாகவும் ஜனாதிபதி தம்மிடம் கூறியதாக மாகாணசபை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம், வடமாகாணசபை உறுப் பினர்கள் நால்வரும் நேற்றையதினம் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சென்று சந்தித்து உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரி யிருந்தனர்.

எனினும், தமக்கு உறுதியான முடிவொ ன்று கிடைக்கும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்தப் போவதில்லையென கைதிகள் தம்மிடம் கூறியதாக மாகாணசபை அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்தார்.

கைதிகள் அனைவரும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடு விக்கப்பட வேண்டும் அல்லது அவர் களுக்கு புனர்வாழ்வளித்து விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. எமது இளைஞர்கள் சிறைகளில் உண்ணா விரதமிருந்து கஷ்டப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

உண்ணாவிரதப் போராட்டத்தை நீங்கள் கைவிடுங்கள். நாம் வெளியிலிருந்து இதனை ஒரு வெகுஜனப்போராட்டமாக முன்னெடுப்போம் என்ற விடயத்தை தாம் கைதிகளிடம் கூறியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றையதினம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப் படுகிறது.

இதற்கு கிடைக்கும் பதிலைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.

தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பே வழங்கப்பட வேண்டும். அவர்களுக்குப் பிணை வழங்குவது என்பது மீண்டும் நீண்டகாலம் நீதிமன்றங்களுக்குச் செல்வதற்கும், தண்டனை பெறுவதற்குமான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும். எனவே பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்.

தண்டனை வழங்கப்பட்ட 42 பேருக்கும் பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது. ஏனைய வர்களுக்கு புனர்வாழ்வு வழங்கி விடுவிப்பதற்கான அதிகாரம் சட்டமாஅதிபர் திணைக்களத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. எனவே இது விடயத்தில் ஜனாதிபதி விரைந்து நடவடிக்கையொன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.