வர்த்தக சங்கங்கள், சிவில் அமைப்புகள் பங்கேற்பு
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது. இதனை முன்னிட்டு வடக்கு, கிழக்கிலுள்ள சகல வர்த்தக நிலையங்கள், அலுவலகங்கள் என்பன மூடப்படவுள்ளன.
போக்குவரத்துத்துறை உட்பட சகலரையும் இதில் கலந்துகொள்ளுமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்திருந்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஹர்த்தாலுக்கான அழைப்பை விடுத்திருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட வருடமாக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் விடுதலைக்காக நடத்தப்படும் இந்த ஹர்த்தாலுடன் பல கட்சிகளும் இணைந்து கொண்டுள்ளன.
கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட் டுவரும் நிலையிலேயே மாகாணம் தழுவிய முழு ஹர்த்தால் இன்று நடத்தப் படுகிறது.
மருத்துவசேவை உள்ளிட்ட அவசர சேவைகளுக்குப் பாதிப்பு இல்லாமல் ஹர்த்தாலுக்கு சகலரும் ஒத்துழைக்கவேண்டும் என வடமாகாணசபையும் கோரியுள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர் ஒன்றியம் என பல தரப்பட்ட வர்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், தமிழ் கைதிகளின் விவகாரம் தமிழ் மக்களைப் பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியிருப்பதால் ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என யாழ் வணிகர் கழகம் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் நேற்றையதினம் ஹர்த்தால் நடத்தப்படவிருந்தபோதும், வடக்கில் இன்றையதினம் ஹர்த்தால் நடத்தப்படுவதால் கிழக்கிலும் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.