23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

தீபாவளி வாழ்த்துகள்

tkn 11 10 sn 55 col

 

தீபாவளியின் ஒளிப்பிரவாகத்தில் மானிடரின் துயரங்கள் மறையட்டும்

Presidentதீபாவளியின் தீபவொளி மனித மனங்களில் ஒளிவீசுவதால் இன ஐக்கியத்துடன் கூடிய நல்லிணக்கம் பிரகாசிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,

உலகெங்கிலும் வாழும் இந்துக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் தீபாவளித்திருநாள் உலகிலிருந்து தீயசெயல்களைப் போக்கி

நற்செயல்களை நிலைநாட்டுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளமையால் ஏனைய உலக மக்களுக்கும் இத்திருநாள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகக் காணப்படுகிறது.

உலகை சிறந்ததோர் இடமாக மாற்றுவதற்கு மனித நாகரிகத்தின் ஆரம்பகால யுகங்களிலும் மனிதனால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்ற உண்மை தற்போதைய தீபாவளிக் கொண்டாட்டங்களிலிருந்து நாம் அறிந்துகொள்ளக் கூடியதாயுள்ளது.

ஒளிவிளக்குகளை ஏற்றுவதன் மூலம் உருவாகும் ஒளியானது இருளை அகற்றுகிறது. இதே போன்று தீபாவளியின் தீபவொளி அனைத்து மனித மனங்களிலும் ஒளிவீசுவதால் அவர்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் ஐக்கியத்துடன் கூடிய நல்லிணக்கம் உலகின் அனைத்து நாகரிகங்களுக்கும் உரித்தான மனிதர்களின் பொதுவான பிரார்த்தனையாக மாற்றமடைகின்றது.

அது பேதங்கள் எதுவுமற்ற ஐக்கிய அரசாட்சிசெலுத்தும் இவ்வுலகின் இருப்புக்குத் தேவையான அடிப்படை நிபந்தனை என்பதை மிகவும் பிரகாசமான விளக்கொளி பூஜையின் மூலம் எமக்கு வலியுறுத்துகிறது.

இவ்வாறான நற் செயல்களை நோக்க மாகக் கொண்ட பொதுவான பழக்கவழக் கங்களினூடாகவே மானிடப் பரிணாம வளர்ச்சியானது பயனுறுதி வாய்ந்ததாக இன்றுவரை வியாபித்துள்ளது. இவ்வாறு அனைத்து காலங்களுக்கும் பொருந்துகின்ற, தீபாவளி போன்ற விழாக்கள் ஆன்மீக வழிபாட்டுப்பழக்க வழக்கங்களின் மூலம் தூய்மைப்படுத்தப்படுவதன் காரணமாக அதன் உன்னத குணவியல்புகள் எதிர்காலத்திலும் நிலைத்திருத்தல் இன்றியமையாததாகும்.

இலங்கையில் வாழும் சகல இந்துக்களுக்கும் “இதயபூர்வமான பக்திப் பெருமித தீபவொளி வீசும் தீபாவளிப் பண்டிகை” மலரட்டும் என பிரார்த்திக்கின்றேன்.


தீய எண்ணங்களை ஒழித்து அறமெனும் ஒளியை ஏற்றுவோம்

PM Wickremesingheநரகாசுரன் எனும் கொடியவனை தோற்கடித்து இருளகற்றிய இன்றைய தீபாவளி நாளில் உள்ளங்களை மனித நேயத்தைக் கொண்டு ஒளியேற்ற வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது,

தீமை தோற்கடிக்கப்பட்டு நன்மை வெற்றி பெறுவதனை அடையாளப்படுத்தி உலகவாழ் இந்து பக்தர்கள் தீபங்களை ஏற்றி இன்று தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

இந்துக்களுக்கு தீங்கிழைத்த நரகாசுரன் எனும் கொடிய அரக்கனைத் தோற்கடித்த தினத்தையும் இளவரசன் இராமன் வனவாசத்திலிருந்து மீண்டு சீதையுடன் மீண்டும் அயோதிக்கு வருகை தந்த தினத்தையும் விசேடமாக தீபாவளித் தினம் நினைவுபடுத்துகின்றது. இந்த அனைத்து தெய்வீகக் கதைகள், பழக்க வழக்கங்களிலிருந்தும் மனிதர்களிடம் காணப்படும் தீய எண்ணங்களை விட்டொழித்து நன்மையெனும் ஒளியை ஏற்ற வேண்டும் என்பதையே எமக்கு வலியுறுத்துகின்றது.

கடவுள் மீது கொண்ட தீராத பக்தியுடன் தீபாவளி தினத்தில் மேற்கொள்ளப்படும் சமயக் கிரியைகள் ஊடாக தன்னுள் குடிகொண்டிருக்கும் மமதை, பேராசை, பொறாமை போன்ற தீய குணங்கள் கலைந்து நற்பயனை அடைந்துகொள்ள முடியுமென்பது இந்து மத நம்பிக்கையாகும். அதற்கமைய இது இந்துக்களுக்கு மாத்திரமன்றி அனைத்து மக்களுக்கும் முன்மாதிரியை எடுத்தியம்பும் சமயப் பண்டிகை என்பதில் விவாதத்திற்கு இடமில்லை.

இலங்கையர் என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இன, மத பேதங்களை மறந்து சாதானமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கு மனதில் உறுதி பூணுவதுடன் எமது உள்ளங்களை மனித நேயத்தினைக்கொண்டு ஒளியேற்றுவோம். அப்போதுதான் தீபாவளிப் பண்டிகை அர்த்தமிக்கதாக அமையும்.

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்லாசிகள்....!


ஆதிக்க உணர்வுகள் மறைந்து சமத்துவம் பிரகாசிக்கும் நன்;நாள்

d.m 200x“தீபத் திருநாளாம்” தீபாவளி திருநாளை உவகையுடனும் உற்சாகத்துடனும் அனைத்து மக்களும் கொண்டாடும் இந்த இனிய தருணத்தில் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நரகாசுரன் எனும் கொடிய அரக்கன் தனது கொடுஞ்செயல்களால் மக்களையும், தேவர்களையும் பெருந்துன்பத்திற்கு ஆளாக்கினான். அக்கொடியவனை திருமால் அழித்த தினமே தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை தீயவற்றை நன்மை வெற்றி கொண்டதை குறித்து கொண்டாடப்படுகின்றது.

இந்த தீபத்திருநாள் நமக்கு அதிகமான அறிவாற்றலை வழங்கி, வளர்ச்சி மற்றும் மேன்மையை அளிப்பதோடு, அறியாமை எனும் இருள் அகற்றி, ஒற்றுமை, அர்ப்பணிப்பு உணர்வை ஏற்படுத்தி, நமது நாட்டை உச்சத்துக்கு கொண்டு செல்ல வழிவகுக்கும்.

இது சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வுக்கான மிகுந்த நம்பிக்கையை கொண்டு வருவதோடு மக்களை பிரித்துவைக்கும் எல்லா வேறுபாடுகளையும் களைந்து அவர்கள் மத்தியில் சுபீட்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்தத் தீபத் திருநாளில் எல்லோர் வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும். இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். இந்த விழா கொண்டாடுகிற இந்த தருணத்தில் அதர்மம் ஒழிந்து, ஆதிக்க உணர்வு மறைந்து, ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்பட்டு எல்லோரும் மகிழ்ந்திடும் ஒரு விழாவாக இவ்விழா அமைய வேண்டும் என்று இன்நன்னாளில் வாழ்த்துகிறேன்.


மலையக மக்களின் வாழ்வில் சந்தோ' தீபம் ஒளிரட்டும்

digambaran 200xமலையக மக்களின் வாழ்வு நிலை தோட்டங்களில் இருந்து கிராமங்களாக மாற்றம் பெற்று அவர்களது வாழ்வில் சந்தோச தீப ஒளி பரவ வாழ்த்துகின்றேன்.

இருளை நீக்கி ஒளிதரும் தீபங்களை ஏந்தி கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி கொள்ளப்படுகின்றது. எமது நாடும் கடந்த காலங்களில் இருளால் சூழ்ந்திருந்தது.

ஜனவரி 8ம் திகதி மற்றும் ஆகஸ்ட் 17ஆம் திகதி ஏற்பட்ட மாற்றத்தினால் இருளை நீக்குவதற்கான ஒளி நாடு முழுவதும் பிரகாசமாக வீசி வருகின்றது. அதேபோல 200 வருடங்களாக வாழ்நிலை மாற்றம் இன்றி தோட்டங்களில் லயன்களில் வாழ்ந்து வரும் மலையக மக்கள் வாழ்விலும் இருள் நீக்கும் ஒளி பரவலாகக் கிடைக்கப்பெற வேண்டும்.

தற்பொழுது நாம் ஆரம்பித்து வைத்துள்ள 7 பேர்ச் காணி உரித்துடனான தனி வீட்டுத் திட்டத்தின் மூலமாக அதற்காக சமிஞ்ஞை கிடைக்கப் பெற்றுள்ளது. எதிர்வரும் காலங்களில் மலையக பிரதேசங்களில் வாழும் அனைத்து உறவுகளும் சொந்த காணியில் தனி வீட்டில் தீபமேற்றி மகிழ்ச்சியாக தீபாளிப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.

மனித மனங்களில் நிலவும் அகங்காரம் தலைக்கனம் பொறாமை போன்ற இருளை நீக்கி ஒழுக்கம் நற்குணம் போன்ற ஒளி பெறவும் தீபாவளி கொண்டாடப்படுவதாக அர்த்தப்படுகிறது.