சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் நாளைய தினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் சினிமா தியேட்டர்கள், இறைச்சிக்கடைகள் மற்றும் மதுபானசாலைகள் மூடப்படுமென உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜித அபேவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, அன்றைய தினம் இடம்பெறவிருந்த தேசிய நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகள் உட்பட அரச மற்றும் அரசசார்பற்ற அனைத்து பொது நிகழ்வுகளும் பிற்போடப்பட்டுள்ளன.
தேரரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் பல்வேறு நிகழ்வுகளும் மத வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் நாட்டின் அனைத்து வீடுகளிலும் மஞ்சள் கொடிகளை ஏற்றுமாறு இறுதிச்சடங்கு ஏற்பாடுகளுக்குப் பொறுப்பான சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.
சோபித தேரரின் பூதவுடலுக்கு நேற்றும் இலட்சக்கணக்கான மக்கள் நாடெங்கிலுமிருந்து வருகை தந்து அஞ்சலி செலுத்தினர்.
இறுதிக்கிரியைகள் நாளை பாராளுமன்ற மைதானத்தில் நடைபெறுவதுடன் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பொறுப்பில் அமைச்சர் வஜித அபேவர்தன தலைமையிலான குழு இதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.
மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிச்சடங்கு பூரண அரச அனுசரணையுடன் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.