17072024Wed
Last update:Wed, 08 May 2024

சோபித தேரர் காலமானார்

sobitha himiநீதி, நியாயத்துக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், கோட்டே ஸ்ரீநாக விகாரையின் விஹாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் நேற்று அதிகாலை காலமானார்.

சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சோபித தேரர், சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்ததாக கோட்டே ஸ்ரீ நாகவிஹாரை நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

இறக்கும் போது இவருக்கு 73 வயதாகும். அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி பாராளுமன்ற மைதானத்தில் அரச மரியாதையுடன் இடம்பெறும். சோபித தேரரின் மறை வையொட்டி எதிர்வரும் 12 ஆம் திகதியை அரசாங்கம் துக்க தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

நாகவிகாரையில் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தில் இது தொடர்பான இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இக்கூட்டத் தில் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிகளும் பங்குபற்றினர். வண. சோபித்த தேரர் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் நேற்று அதிகாலை (5.50 மணிக்கு) இலங்கை நேரப்படி அதிகாலை 3.20 மணிக்கு காலமானார்.

நேற்றுப் பகல் தேரரின் பூதவுடல் சிங்கப்பூர் என்ட்ரூ வீதியிலுள்ள இலங்கை தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சமய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிங்கப்பூரின் மகா சங்கத்தினர் இதில் கலந்து கொண்டனர்.காலஞ்சென்ற சோபித தேரரின் பூதவுடல் நேற்றிரவு 09.05 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. (படம் 07ம் பக்கம்) தேரர் ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டது முதல் ஜனாதிபதி, பிரத மர் ஆகியோர் சிங்கப்பூர் மருத்து வர்க ளுடன் தொடர்பு கொண்டு நிலைமைகளை அவதானித்து வந்தனர். தேரரின் மறைவு குறித்து தகவல் கிடைத்த உடன் பிரதமர் தூதரக அதிகாரிகளுக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு மேற்கொள்ள வேண்டி நடவடிக்கை தொடர்பாக உத்தரவுகளை வழங்கினார்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் உத்தரவின் பேரில் தேரரின் சிகிச்சைக ளுக்கான சகல செலவுகளையும் இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை பதவி கவிழ்க்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து முன்னின்று உழைத்ததன் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் கதாநாயகனாக மறைந்த மாதுலுவாவே சோபித தேரர் விளங்கினார்.

கொழும்புக்கு கொண்டுவரப்படும் தேரரின் பூதவுடல் இன்று கோட்டே ஸ்ரீநாக விஹாரைக்கு கொண்டு செல்லப் படவுள்ளது.

கோட்டே ஸ்ரீநாக விஹாரையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் அன் னாரது பூதவுடல் எதிர்வரும் வியாழக் கிழமை பாராளுமன்ற மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அரச மரியாதைகளுடன் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இவர் 1990 ஆம் ஆண்டுகளில் கிராமம், கிராமமாகச் சென்று மனித உரிமைகள் தொடர்பாக தர்ம நிகழ்ச்சிகளை நடத்தி னார். 1994 இல் நாட்டில் ஏற்பட்ட ஜனநாயக அரசியல் மாற்றங்களின் முன்னோடியானார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் யோசனையை மக்கள் மயப்படுத்த அவர் நகரம் தோறும் சென்றார்.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மனித உரிமை மீறல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த தான் எதிர்ப்பு இல்லை என அவர் துணிச்சலுடன் முன்வந்து கூறினார்.

ஜுலை 22 ஆம் திகதி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இவர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் கைச்சாத்திட்டார்.