23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

எவன்கார்ட்' சட்டபூர்வமாகவே செயற்பட்டது; ஆயுதங்கள் அரசுக்கு சொந்தமானவை

thilak marapanaஎவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் சட்டபூர்வமாகவே செயற் பட்டது. இதிலிருந்த ஆயுதங்கள் இலங்கை அரச ¡ங்கத்துக்குச் சொந்தமானவை என்பதால் அவற்றுக்கு அனுமதி தேவையில்லை என சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீர மைப்பு அமைச்சர் திலக் மாரப்பன பாராளு மன் றத்தில் தெரிவித்தார். எவன்கார்ட் விவகாரம் தொடர்பில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எவன்கார்ட் விவகாரத்தில் பாரிய மோசடி இடம்பெற்றிருப் பதாகக் காண்பிக்க சிலர் முயல்கின்றனர். சிறியதோ பெரியதோ எந்த வகையான மோசடிக்கும் நான் மன்னிப்பு வழங்கப் போவதில்லை. மோசடி நடந்திருந்தால் அது குறித்து துரிதமாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்த வேண்டும். நான் அமைச்சராக பதவியேற்பதற்கு முன்னர் சட்டத்தரணி என்ற வகையில் எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஷங்க சேனாதிபதிக்கு சட்ட ஆலோசனை வழங்கியிருக்கிறேன்.

ஜனவரி 10ஆம் திகதி எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் பிடிபட்டது. சேனாதிபதி என்னிடம் கூறிய தகவல்கள் அனைத்தையும் என்னால் வெளியிட முடியாது. அவ்வாறு வெளியிட்டால் பலர் வெட்கித் தலைகுனிவார்கள். அவர் கூறியவைகளை மறைக்க எனக்கு சட்டரீதியான அங்கீகாரம் இருக்கிறது. மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்கள் பல நாடுகளிலும் இயங்கி வருகின்றன. காலி கடற்பரப்பு முதல் ஈடன் வரை கடலில் கடற்கொள்ளையர்கள் செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் கப்பல்களை தாக்கி கொள்ளையடிப்பதோடு கப்டன்மாரை கடத்திச் சென்று பணம் பறித்து வருகின்றனர்.

இந்த அச்சுறுத்தல்களிலிருந்து மீள்வதற்கு ஆயுதக் கப்பல்கள் தேவைப்படுகின்றன. இதேவேளை எந்த நேரமும் கப்பலில் ஆயுதங்களை வைத்திருக்க முடியாது. ஆயுதங்களுடன் துறைமுகத்துக்குள் நுழைவதற்கும் அனுமதி இல்லை. இதனால் ஈடன் பகுதியிலிருந்து வரும் மிதக்கும் ஆயுதக் கப்பல்கள் காலி கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் நீங்கிய பின்னர் அதில் உள்ள ஆயுதங்களை காலியில் உள்ள மிதக்கும் ஆயுதக் கப்பலுக்கு மாற்றப்படும்.

மிதக்கும் ஆயுதக்கப்பலில் உள்ள ஆயுதங்கள் வெளிநாட்டுக் கம்பனிகளுக்கே சொந்தமனாவை. அந்தக் கம்பனிகளின் பிரதிநிதிகளும் அதே கப்பலில் தங்கியிருப்பார்கள். மிதக்கும் ஆயுதக் கப்பல்கள் சர்வதேச கடல் சட்டத்துக்கு ஏற்ப ஐ.நா கண்காணிப்பின் கீழ் செயற்பட்டு வருகின்றன. இவற்றில் அனுமதியற்ற ஆயுதங்களை வைத்திருக்க முடியாது. யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கை அரசாங்கமும் வேலைவாய்ப்பு இன்றி இருந்த படையினருக்காக இவ்வாறு மிதக்கும் ஆயுதக் கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தது. கடற்படைக்கு இதற்கான பொறுப்பு வழங்கப்பட்டபோதும் அதனால் இதனை சரிவர நிறைவேற்ற முடியாததால் 100 வீதம் அரசுக்குச் சொந்தமான ரத்னா லங்கா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் ஊடாக ரத்னாலங்கா நிறுவனத்துக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. வாடகைக்குப் பெற்ற கப்பல்களிலேயே மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்கள் செயற்பட்டதோடு ஒரு சமயம் இதிலிருந்த 200 ஆயுதங்கள் காணாமல் போயிருந்தன. அவற்றில் சில ஆயுதங்கள் போலந்து நாட்டில்வைத்து கண்டுபிடிக்கப்பட்டன. இவை இலங்கை அரசுக்குச் சொந்தமான ஆயுதங்கள் என தெரிய வந்ததையடுத்து இலங்கை அரசாங்கம் முறையற்ற விதத்தில் செயற்படுவதாகவும் இதனூடாக பயங்கரவாதிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் செல்லலாம் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பாதுகாப்பு அமைச்சு குழப்பம் அடைந்தது.

மிதக்கும் கப்பல்களிலிருந்து ஆயுதங்களைப் பெற்று மீன்பிடி கப்பல்களுக்கு வழங்கும் வியாபாரம் ஒன்றை நிஷங்க சேனாதிபதி நடத்தி வந்தார். காணாமல் போன ஆயுதங்களை கண்டுபிடித்துத் தரும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. இவர் அந்த ஆயுதங்களில் பாதியை கண்டுபிடித்து வழங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில் அவருடன் இணைந்து செயற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2014 ஒக்டோபர் மாதம் முதல் இந்த மிதக்கும் ஆயுதக் கப்பல் காலி துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்தது. இது குறித்து யாரும் அறிந்திருக்கவில்லையென்றால் அது வியப்புக்குரிய விடயமாகும். இதிலிருந்த ஆயுதங்கள் ரத்னாலங்காவுக்கு சொந்தமான ஆயுதங்களாகும். வெளிநாட்டு கம்பனிகளுக்கு சொந்தமான ஆயுதங்கள் வெளிநாட்டு கம்பனிகள் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த பிரதிநிதிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தன.

சந்தேகத்தின் பேரிலே பொலிஸாரினால் இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டது. கப்பல் பிடிபட்டபோது இதிலிருந்து ஆயுதங்கள் யாருக்கு சொந்தமானவை என பொலிஸார் அறிந்திருக்கவில்லை. இந்தக் கப்பல் கடலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடல் கொந்தளிப்பாக இருந்ததால் மிதக்கும் ஆயுதக் கப்பல் காலி துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதற்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது. இது தவிர குறித்த கப்பல் பழுதடைந்தது என்பதால் அதிலுள்ள ஆயுதங்களை வேறு கப்பலுக்கு மாற்றவேண்டிய தேவையும் இருந்தது. இதற்கும் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது. இதிலிருந்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கவில்லை. அவை தினமும் பயன்படுத்தப்பட்டன. படகுகளில் எடுத்துச் செல்லப்பட்டு வேறு கப்பல்களுக்கு வழங்கப்பட்டன.

பெயர் எடுப்பதற்காக 2002ஆம் ஆண்டி மிலேனியம் சிட்டியை பிடித்ததைப் போன்றே ஆட்சி மாறியவுடன் இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டது. இது நாசகார வேலையாகும். இதிலிருந்த ஆயுதங்களுக்கு அனுமதி பெறப்பட்டிருக்கவேயில்லை என பிரதமர் கூறியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் இதிலிருந்த ஆயுதங்கள் அனைத்து இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான ஆயுதங்களாகும். அரசாங்க ஆயுதங்களுக்கு அரசாங்கத்தின் அனுமதி பெறத் தேவையில்லை. எவன்கார்ட் விவகாரம் தொடர்பில் ஆராய்ந்த சட்டமா அதிபர் இதற்கெதிராக வழக்குத் தொடர போதியளவு ஆதாரங்கள் கிடையாது என அ,றிவித்திருந்தார். இது தொடர்பில் அவர் மீது பழிசுமத்தி வருகிறார்கள். சட்டமா அதிபர் ஒருபோதும் தவறு செய்தவர் அல்ல. இவர்களை விமர்சிப்பது நியாயமல்ல. இந்த விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி முழுமையான விசாரணை நடத்தியுள்ளது என்றார்.