இலங்கைக்கும் தாய்லாந் துக்குமிடையில் நிலவும் இருதரப்பு வரிமுறையை நீக்குவதுடன் இரு நாடுக ளுக்கிடையிலான இறக்கு மதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துவது அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தாய்லாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அந்நாட்டின் வர்த்தக சமூகத்தினர் மத்தியில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையில் 1996 இல் இருதரப்பு முதலீட்டு அபிவிருத்தி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனை மேலும் பலப்படுத்துவது அவசியம் என்றும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தியுள்ளார்.
தாய்லாந்து பேங்கொக் நகரில் நடைபெற்ற இந்த வர்த்தக சமூகத்தினருக்கிடையிலான சந்திப்பில் அந்நாட்டின் பிரதிப் பிரதமர் ஷொம் கிட் ஜது ஸ்ரீபிடக் உட்பட முக்கியஸ்தர்கள், வர்த்தக சமூகத்தினர் பெருமளவில் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
தாய்லாந்துக்கும் இலங்கைக்குமி டையிலான வர்த்தக நடவடிக்கைகளில் தாய்லாந்தே பெரும் இலாபமீட்டுகிறது. இந்த வகையில் இலங்கை தமது ஏற்றுமதியை அதிகரிப்பது முக்கியமானது.
இலங்கையின் பொருளாதாரத்துறை புதிய அரசாங்கத்தின் கீழ் சுதந்திரமாக்கப் பட்டுள்ளதுடன் வர்த்தக சமூகத்தினருக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு முதலீட்டுச் சபை ஓரே கூரையின் கீழ் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இலங்கையை கடல், வான், வலு சக்தி மற்றும் வாணிபத்துறைகளில் தெற்காசி யாவின் கேந்திர நிலையமாக முன்னேற்று வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
எதிர்காலத்தில் சுற்றுலா வர்த்தகம், தொழில்நுட்பம், ஏற்றுமதி உற்பத்தித்துறை உட்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு மாற்று வழி மின்சாரம், விவசாயத்தோடு தொடர்புடைய கைத்தொழில் துறையின் முதலீடுகள் மற்றும் மாணிக்கக்கல், ஆடைத் தொழில் துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கச் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
தேயிலை, இறப்பர், தைத்த ஆடைகள், வாசனைத் திரவியங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தற்போது இலங்கை ஏற்றுமதி செய்து வருகிறது. இதற்குச் சிறந்த சந்தை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தாய்லாந்திலிருந்து எரிபொருள், ஆடைகள் இரசாயனப் பொருட்கள், மருந்து, கடதாசி, பிளாங்டிக் மற்றும் உரவகைகளை இலங்கை இறக்குமதி செய்கின்றது. இந்த வகையில் இருநாடுகளுக்கு மிடையில் 1996 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு முதலீட்டு உடன்படிக்கை மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
தாய்லாந்து பிரதிப் பிரதமர் மற்றும் வர்த்தக முதலீட்டுத்துறை முக்கியஸ்தர்களும் இங்கு உரையாற்றியுள்ளனர்.