23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

தாயகம் திரும்புமாறு ஜனாதிபதி அழைப்பு

tkn 11 03 nt 02 mglநாட்டில் சுதந்திரமும் ஜனநாயகமும் நிலைநாட்டப்பட்டுள்ள நிலையில் தாய்நாட்டிற்குத் திரும்பி வந்து நாட்டுக்காக சேவை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 தாய்லாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு வாழும் இலங்கையர்களை சந்தித்து உரையாற்றும் போதே இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

 இலங்கைக்கும் தாய்லாந்துக்கு மிடையிலான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்ட 60 ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வு தாய்லாந்தில் நடைபெறவுள்ளதுடன், இதற்கென தாய்லாந்து பிரதமர் விடுத்த விசேட அழைப்பினையேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

தாய்லாந்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த மேற்படி நிகழ்வில் அங்கு வாழும் இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு அவர்கள் மத்தியில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, அரசியலமைப்பிற்கிணங்க மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல் உட்பட்ட சிறந்த பின்புலத்தை உருவாக்கி உள்ள நிலையில் இப்போது இலங்கையில் அனைத்துத் துறையிலும் சுதந்திரமாக செயற்பட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுதந்திரமான சூழல் மற்றும் மக்களுக்கான வசதிகள் அனைவரும் பயம் சந்தேகமின்றி செயற்படக்கூடிய சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளது.

தற்போது தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள துரித அபிவிருத்தி ஏனைய நாடுகளுக்குப் பெரும் முன்னுதாரணமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மீண்டும் தாய்நாட்டுக்குத் திரும்பும் இலங்கையர்களுக்கு சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி எவ்வாறான வசதிகள் அவசியம் என்றும் அவர்களிடம் வினவினார்.

இதற்குப் பதிலளித்த பல்கலைக்கழக மாணவர்கள் புத்தாக்கம் தொடர்பில் தேவையான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையிலான விமான சேவைகளை விரிவுபடுத்துவது தொடர்பில் இதன்போது வர்த்தக சமூகத்தினர் ஜனாதிபதியைக் கேட்டுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் மங்கள சமரவீர, தயா கமகே, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் டீ சொய்சா ஆகியோரும் கலந்து கொண்டனர்.