17072024Wed
Last update:Wed, 08 May 2024

ஜெனீவாவில் பங்குகொண்டமை தமிழர்களுக்கு எதிரானதல்ல

tkn hakeem tpkஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா கூட்டத்தொடரில் 2012ஆம் ஆண்டு அரசாங்கத்தின் நீதியமைச்சராக முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பங்குகொண்டமை தமிழ் மக்களுக்கு எதிரான காட்டிக்கொடுப்பு என்று கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைவதை நினைவுகூரும் வகையில் கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லிம் காங்கிரஸினால் கருத்தரங்கொன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அதிதிகளில் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அதன்போது, ஜெனீவா கூட்டத்தொடரில் 2012 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டமை தமிழ் மக்களுக்கு எதிரான காட்டிக் கொடுப்பு என்று அவர் விமர்சித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அந்த விமர்சனம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது:

“ஜெனீவா கூட்டத்தில் நான் பங்குபற்றிய மையை வைத்துக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தமிழ் சமூகத்துக்கு எதிராக காட்டிக் கொடுப்பொன்றினை மேற்கொண்டது எனக்கூறுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் தீர்மானங்கள், தமிழ் தரப்புக்களால் பல தடவை விமர்சிக்கப்படுகின்றவையாகவும், ஜீரணிக்க முடியாதவையாகவும் இருந்த மையை நாங்கள் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றோம்.

ஒரு கட்சி என்கின்ற வகையில் அரசாங் கத்துடன் சேர்வதற்கோ, விலகுவதற்கோ எடுக்கின்ற தீர்மானங்கள் எங்கள் கட்சியில் எடுக்கப்படுகின்ற பல்வேறு கலந்துரையாடல் களினூடாக மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எங்களுடைய நியாயப்படுத்தல்களை மாற்று அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்வ தென்பது இயலாததாக இருக்கக் கூடும்.

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுறுவதை நினைவு கொள்ளும் வகையில், எமது கட்சியினால் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எங்களால் அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவர் ஆற்றிய உரையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தன்னுடைய தவறுகளையும் ஒப்புதலாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் பாணியில் சில கருத்துக்களைத் தெரிவித்தி ருந்தார். குறிப்பாக 2012ஆம் ஆண்டு ஐ.நா.சபையின் ஜெனீவா கூட்டத் தொடரில் நான் கலந்து கொண்டமை குறித்து சில ஆட்சேபனைகளை நண்பர் சுமந்திரன் வெளியிட்டிருந்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதியமைச்சர் என்ற அந்தஸ்த்தில் இருந்து கொண்டு நீதியமைச்சு சார்ந்த விடயங்களுக்கு பதில் கூற வேண்டியிருந்ததால்தான் அப்போது நான் ஜெனீவா செல்வது தவிர்க்க முடியாததாக இருந்தது.

ஜெனீவா கூட்டத்தொடர் கருத்தாடல் களின்போது பூரணமானதொரு மனித உரிமை விசாரணை நடத்தப்படவேண்டும் என்பது குறித்த விடயத்தை அங்கு நான் வலியுறுத்தியிருந்தேன் என்பதையும் இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடந்த விவகாரங்கள் தொடர்பிலும், நல்லிணக்கம் சம்பந்தமான விடயங்களின் போதும், அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக் கைகள் தொடர்பில் நான் அங்கு சுட்டிக் காட்டியிருந்தேன்.

அதேவேளை நீதியமைச்சு சார்ந்த சட்டவாக்கங்களை உருவாக்குதல் தொடர்பில் அங்கு நான் பல விடயங்களை வலியுறுத்தினேன். குறிப்பாக சாட்சிகளைப் பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் சில பாரதூரமான குற்றச் செயல்களை தண்டனைக்குரிய குற்றங்களாக தண்டனைச் சட்டக்கோவையில் சேர்ப்பது தொடர்பில் அரசாங்கம் நழுவல் போக்கினைக் கடைப்பிடிக்காமல் திட்டவட்டமான தீர்மானங்களை எடுப்பதற்கு என்னுடைய ஜெனீவா பங்குபற்றுதல் மிகவும் லாவகமாக வழிகோலியது.

இதுமட்டுமன்றி, அமைச்சரவைக் கூட்டங்களிலும் வெளியிலும் கூட, மேற் கூறிய விடயங்களை மிகவும் பக்குவமாகவும் நளினமாகவும் கையாண்டிருக்கிறேன்.

மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான விடயங்களிலும், யுத்தத்துக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் போன்ற விவகாரங்களிலும் இலங்கை அரசு பதில் கூறும் விடயத்தில் தவறிழைத்து விடக்கூடாது என்பதற்காக இந்த விடயங் கள் தொடர்பாக கையாள்வதை என்னுடைய மனச்சாட்சிக்கு அமைவாக செய்திருக்கிறேன் என்பதில் நான் திருப்தியடைகிறேன்.

இருந்தாலும், அரசு சார்பில் எமது பங்களிப்பு ஒட்டுமொத்தமாக இருந்திருக்கக் கூடாது என்று வாதிடுபவர்களுக்கு மேற்படி விடயங்களை ஜீரணித்துக் கொள்வது சற்று கஷ்டமாகத்தான் இருக்கும்.

ஓர் அரசின் நீதியமைச்சராக, நீதியமைச்சு சார்ந்த விடயங்கள் தொடர்பாக சர்வதேச மாநாடுகளிலும் சர்வதேச அரங்குகளிலும், ஐ.நா. சபையின் அமர்வுகளிலும் கலந்து கொண்டு பதிலளிக்க வேண்டிய பதவி சார்ந்த கடப்பாடுகள் மறுதலிக்க முடியாத தொன்றாக எனக்கிருந்தது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் போராட்டங்கள் எவ்வளவு நியாயமாக இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் எங்களுடைய அடிப்படைக் கோரிக்கைகளை தமிழ் தரப்புக்களின் தலைமைகள் எதிர்த் திருந்தன. தங்கள் சமூகம் சார்ந்த எதிர்ப்புக்களைச் சமாளிக்க முயாமல்தான் தமிழ் தலைமைகள் இவ்வாறு நடந்து கொண்டன. இதன்போது முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கைகள் நியாயமற்றவை என்றும் அவற்றினை வழங்க முடியாது என்றும் தமிழ் தலைமைகள் வாதிட்ட பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

அந்தவகையில் அரசியல் ரீதியாக எமக்கிடையில் முரண்பாடுகள் இருப்பது தவிர்க்க முடியாதது.

இருந்தாலும் சிறுபான்மை சமூகங்களின் உரிமை சார்ந்த விடயங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ற வகையில் மிகவும் ஆக்கபூர்மாகவும், அச்ச உணர்வு இல்லா மலும் அமைச்சரவைக்குள் பேசியிருக்கிறேன். இதனால் சிறுபான்மை சமூகங்களுக்கு பலவிதமான ஆபத்துக்கள் நடப்பதைக் கட்டுப்படுத்துவதிலும் தடுப்பதிலும் நான் வெற்றி கண்டிருக்கிறேன். அவற்றை யெல்லாம் இங்கு பட்டியல்போட்டு காட்ட வேண்டிய தேவை இருக்காது என்று நினைக்கிறேன்.

இவற்றையெல்லாம் விட்டு விட்டு ஐ.நா.சபையின் கூட்டத் தொடரில் ஒரு நீதியமைச்சராக நான் கலந்துகொண்ட மையை ஒரு பாரிய காட்டிக் கொடுப்பாக சித்திரிக்க முயற்சிப்பதானது நியாயமான தல்ல.

இருந்தபோதும் மேலெழுந்த வாரியாகப் பார்க்கின்ற போது ஜெனீவா கூட்டத் தொடரில் நான் பங்குபற்றியமையானது தமிழ் சமூகத்தின் மத்தியிலும் அதன் தலைமைகள் மத்தியிலும் உறுத்தலாக உள்ளதையும் நான் உணர்கிறேன்.

ஆனாலும் ஜெனீவா கூட்டத்தில் நான் பங்குபற்றியமையினூடாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தமிழ் சமூகத்துக்கு எதிராக காட்டிக்கொடுப்பொன்றை மேற் கொண்டது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் இவ்வாறு அவர் கூறினார்.