தாய்லாந்து நாட்டின் பிரதமர் ஜெனரல் பிரீயூத் சான்ஒட்டாவின் விஷேட அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்நாட்டின் சுவர்ணபூமி விமான நிலையத்தை நேற்று பிற்பகல் சென்றடைந்தார்.
அந்நாட்டு உப பிரதமர் சொம் கிப் ஜட்டுசிறி டிடக் (Somkib Jatusri titak) மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தூதரக உயரதிகாரிகள் ஆகியோர் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அந்நாட்டு விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இராணுவ அணிவகுப்பு மரியாதையோடு ஜனாதிபதிக்கு பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இத்தபானோ தம்மாலங்கார தேரர், மகியங்கனை ரஜமகா விகாராதிபதி ஊருலவத்தே தம்மரக்கித தேரர் ஆகியோர் தலைமையில் இலங்கையிலிருந்து தாய்லாந்துக்கு எடுத்து செல்லப்பட்ட கெளதம புத்த பிரானின் புனித வஸ்துகளுக்காக விமான நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட சமய நிகழ்வுகளிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தாய்லாந்து தேரர்களுக்கு ஜனாதிபதி தானம் வழங்கினார். கெளதமி புத்தரின் புனித வஸ்துகளின் ஆசீர்வாதத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு மேலும் வலுவடையும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, தாய்லாந்துக்கு வருகை தருமாறு தமக்கு அழைப்பு விடுத்தமைக்கு அந்நாட்டு அரசாங்கத்திற்கு நன்றிகளையும் தெரிவித்தார்.
தமக்கும் தம் மக்களுக்கும் கொளதம புத்தரின் புனித வஸ்துகளை வழிபடுவதற்கான அபூர்வ வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தமைக்கு தாய்லாந்து உப பிரதமர், நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
அத்தோடு இலங்கைக்கும் தாய்லாந்துக்கு மிடையிடையில் நிலவிவரும் கலாசார தொடர்பாடல் இதன் மூலம் மேலும் வளம் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கெளதம புத்தரின் இந்த புனித வஸ்துகள் இன்று (2ம் திகதி) முதல் எதிர்வரும் 16ம் திகதி வரையும் புத்தமன்தொன் விகாரையில் மக்கள் வழிபாடுகளுக்காக வைக்கப்படவுள்ளது.
இலங்கைக்கும் தாய்லாந்துக்கிடையிலான இராஜ தந்திர உறவின் 60வது வருட நிறைவின் நிமித்தம் தாய்லாந்துக்கு ஜனாதிபதி விஜயம் செய்துள்ளார். அதேவேளை ஜனாதிபதியின் விஜயத்தின் நிமித்தம் பேங்கொக் நகரில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விசேட கலாசார நிகழ்ச்சியையும் ஜனாதிபதி நேற்று மாலை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.