23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

இலங்கையின் நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஆணைக்குழு திருப்தி

tamilnews fishமீன் ஏற்றுமதித் தடை நீக்க பரிந்துரை

ஐரோப்பிய நாடுகளில் இலங்கை மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்குவதற்காக இந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையிட்டு ஐரோப்பிய ஆணைக்குழுவின் கொழும்புத் தூதுவர் டேவிட் கெலி திருப்தியை வெளியிட்டுள்ளார்.

 மீன் ஏற்றுமதிக்கான இத்தடையை நீக்குவதற்காக இலங்கை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவை ஐரோப்பிய ஆணைக்குழுத் தூதுவர் டேவிட் கெலி கடந்த வெள்ளியன்று மாலையில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சமயமே அவர் இத்திருப்தியினைத் தெரிவித்துள்ளார்.

இச்சமயம் அமைச்சர் அமரவீர இலங்கை மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கிடவென மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை விலாவாரியாக தூதுவர் கெலிக்கு எடுத்துக் கூறினார். அமைச்சர் தெரிவித்த விபரங்களை கேட்டறிந்த தூதுவர் தமது திருப்தியை வெளிப்படுத்தியதோடு படகுகளைக் கண்காணிப்பதற்காக அமைச்சு வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை பிரிவையும் தூதுவர் டேவிட் கெலி பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து தூதுவர் கெலி குறிப்பிடுகையில்: மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கிடவென இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளன. இவை தொடர்பாக எதிர்வரும் 13ம் திகதி இலங்கைக்கு வருகைதரவிருக்கும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தொழில்நுட்ப குழுவுக்கும் அறிவூட்டுவேன் என்றும் கூறினார்.