கல்வித்துறையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சகல பிள்ளைகளுக்குமான இலவசக்கல்வி உரிமைகளைப் பாதுகாப்பதே புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
நுகேகொட சமுத்திரா தேவி மகளிர் வித்தியாலயத்தில் இன்று (28) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
எல்ரீரீஈ. பயங்கரவாதம் மற்றும் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்த பிரதேசங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த பிரதேசத்தில் உள்ள பிள்ளைகளின் கல்வித் தரம் ஏனைய பிரதேசங்களில் உள்ள பிள்ளைகளின் கல்வித் தரத்திற்கு உயர்த்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டில் உள்ள சகல பிள்ளைகளுக்கும் இலவசக் கல்வியின் சிறந்த பெறுபேறுகளை வழங்குவது எல்லோரினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசாங்கம் தேவையான வசதிகளை பிள்ளைகளுக்கு வழங்கியுள்ள நிலையில், அவர்களது கல்விக்கான ஊக்குவிப்புக்களை வழங்கவேண்டியது பெற்றோர்களுடைய பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
9 மாகாணங்களிலும் வாழ்கின்ற மக்களின் எழுத்தறிவை அதிகரிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்கால கல்வித்திட்டங்களின் ஊடாக நாட்டின் சகல மக்களினதும் எழுத்தறிவு வீதத்தை 100% வீதத்திற்கு அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய சமூத்திரா தேவி மகளிர் வித்தியாலய மாணவிகளுக்கு பரிசில்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மேல் மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய மற்றும் மாகாண அமைச்சர் காமினி திலக்க சிறி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.