23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

சகோதர பாசத்துடன் தீர்வு காண வேண்டும்

tkn indian fisherman ndkசகோதர பாசத்துடன் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டிய பிரச்சினை!

'தினமணி' பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம்

எத்தனை முறை மனு கொடுத்தாலும், எத்தனை முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாலும் யார் ஆட்சியில் இருந்தாலும் தீர்க்க முடியாத பிரச்சினையாக மீனவர் பிரச்சினை உருவாகிக் கொண்டு இருக்கிறது.

 இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைப் பிடிக்கப்படும் தொடர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக அ.தி.மு.க எம்.பி.க்கள் அனைவரும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் மனு கொடுத்த அடுத்த நாளே, 34 மீனவர்கள் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருக்கும் பிரச்சினை போதாதென்று, தற்போது எல்லை மீறும் மீனவர்களுக்கு ரூபா 15 கோடி அபராதம் விதிக்க இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இத்தகைய அபராத முடிவு இந்திய - இலங்கை உறவைப் பாதிக்காது என்றும் இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்ததைப் பார்க்கும் போது இந்த அபராதம் நிச்சயமாக அமுலுக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.

இந்த அபராத முடிவுக்கு தமிழக எதிர்க் கட்சித் தலைவர்கள் அனைவரும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மீன்பிடித்தல் என்பது தொழில் எல்லை தாண்டி மீன் பிடிப்பது குற்றம் என்றாலும் கொடுங்குற்றம் அல்ல. இது கடத்தல் விவகாரம் அல்ல. வழக்கமாக போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கே மிகையான அபராதத் தொகை, அதிகபட்ச தண்டனை எல்லாம் உண்டு.

ஆகவே, மீனவர்களுக்கு ரூபா 15 கோடி வரை அபராதம் என்பது அர்த்தமற்றது.

ஒரு மீன்பிடிப் படகு தனது ஒரு பயணத்தில் சராசரியாக பிடிக்கும் மீன் அளவு, அவற்றின் சந்தை மதிப்பு அவற்றைக் கொண்டே அபராதத் தொகை நிர்ணயிக்கப்படுவது வழக்கம். இதுபோன்ற அச்சுறுத்தல் பரப்புரை செய்யப்படுகிறது என்றே நம்பத் தோன்றுகிறது. உண்மையாகவே இவ்வாறு மிக அதிகமான தொகையாக அது அமையும் என்றால் தமிழக மீனவர்களால் அதை ஈடு செய்ய முடியாது.

அதேநேரத்தில் அவர்களை மீட்டு வரும் பொறுப்பு, இந்திய அரசைக் காட்டிலும் தமிழக அரசுக்கே அதிகம் என்பதால் இந்த அபராதத் தொகையைச் செலுத்தி மீனவர்களை அழைத்து வரும் கட்டாயம் நேரிடலாம்.

சராசரியாக ஒரு மாதத்துக்கு 20 மீனவர்கள் இலங்கை அரசினால் நடுக்கடலில், எல்லை தாண்டியதாகக் கைது செய்யப்படுகிறார்கள். இது தமிழக அரசுக்கு மிகப்பெரும் தலைவலியாக மாறிவிடும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கடிதம் எழுதி அழுத்தம் கொடுத்து அண்மையில் 86 மீனவர்கள் விடுதலைக்கு வழிவகுத்தாலும் இதேபோன்று ஒவ்வொரு முறையும் சாதிப்பது என்பது இயலாத விஷயம்.

ஏனெனில் நாம் இலங்கைக் கடற்படையின் அட்டூழியம் என்று எழுதினாலும் கூட இலங்கைக் கடற்படைதான் எல்லை தாண்டி வந்து நமது மீனவர்களைக் கைது செய்தனர் என்ற குற்றச்சாட்டு ஒன்றுகூட இல்லை.

மேலும் அவர்கள் 86 தமிழக மீனவர்களை விடுவிக்கும் போது நல்லெண்ணத்தின் அடிப்படையில் நாம் தமிழகச் சிறையிலிருந்து விடுவிக்கும் இலங்கை மீனவர்களின் எண்ணிக்கை 2 மட்டுமே.

ஏன் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டுவதில்லை? எப்போதும் ஏன் தமிழக மீனவர்கள் மட்டுமே எல்லை தாண்டுகிறார்கள்.

கைதாகிறார்கள்? இதற்குக் காரணம், மீன்பிடித் தொழில் தமிழ் நாட்டு மீனவர்களுக்கு மட்டுமல்ல, இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கும் வாழ்வாதாரமாக இருக்கிறது.

உள்நாட்டுப் போரினால் மீன்பிடித் தொழிலை நடத்த முடியாமல் இருந்தவர்கள் இப்போது கடலுக்கு வரும்போது, அவர்களது மீன்களை தமிழக மீனவர்கள் மொத்தமாக விசைப்படகுகளால் அள்ளி எடுத்துவிடுகிறார்கள் என்பதே அவர்களது குற்றச்சாட்டு. இதில் உண்மையே இல்லை என்று மறுத்துவிட முடியாது.

இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட முடியும். அபராத முடிவை கைவிடச் செய்ய தனது செல்வாக்கால் அல்லது நட்பினால் இந்திய அரசு அழுத்தம் தர முடியும்.

இரண்டாவதாக இந்த அபராதத் தொகையைக் குறைத்து நிர்ணயிக்க வலியுறுத்த முடியும். மூன்றாவதாக இந்த அபராதத் தண்டனைக்கு உள்ளாகப் போகிற மீனவர்கள் இந்திய மீனவர்கள் என்பதால் இதற்கான விதிமுறைகளை வகுக்க வேண்டிய நிபந்தனைகளை உருவாக்க வேண்டிய பொறுப்பும் இந்திய அரசுக்கு இருக்கிறது. இது அவர்களது அரசு விவகாரத்தில் தலையிடுவதாக ஆகாது.

இந்தப் பிரச்சினைக்கு இந்திய - இலங்கை மீனவர் அமைப்புகள்தான் தீர்வு காண முடியும் என்று இந்தியாவும், இலங்கையும் மிகத் தெளிவாகவே தெரிவித்துவிட்டன.

இருப்பினும், இருநாட்டு மீனவர் அமைப்புகளிடையே ஒருமித்த கருத்து இதுவரை ஏற்படவில்லை. இந்த விவகாரத்தில் விட்டுக் கொடுத்துத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு தமிழக மீனவர்களுக்கே அதிகம். அரசியல் பின்னணிகளைக் கொண்டும், விசைப்படகு உரிமையாளர்களின் விருப்பங்களுக்காகவும் இந்த விவகாரத்தில் தமிழக மீனவர்கள் பிடிவாதம் பிடிப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்தப் பிரச்சினையில் தமிழக, இலங்கை, மத்திய அரசுகள் செய்யக் கூடியது இரு தரப்பு மீனவர்களையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை க்கு வழிகோலுவது மட்டுமாகத்தான் இருக்கும். மீன்பிடி முதலாளிகளுக்கு இந்தத் தொழில் இல்லை என்றால் வேறு தொழில் இருக்கிறது.

ஆனால் மீனவர்களுக்கு இது மட்டுமே தொழில். இந்திய - இலங்கை மீனவர்கள் இருவருமே தமிழர்கள். இருவருக்குமே கடல்தான் வீடு, தொழில், வாழ்க்கை எல்லாமும். இரு தரப்பும் அரசியலுக்கு அப்பாற்பட்டு, விசைப்படகு உரிமையாளர்களின் பேரசைகளுக்கு அப்பாற்பட்டு சகோதர பாசத்துடன் பேசினாலே போதும். பிரச்சினை தீர்ந்துவிடும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.