சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசு பொதுமன்னிப்பில் விடுதலைசெய்ய வேண்டும் எனக் கோரி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் பேச்சு நடத்தவுள்ளேன் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்க முடியாது என்றும், நீண்ட காலம் தடுப்பிலுள்ள கைதிகளுக்கு நவம்பர் மாத முதல் வாரத்துக்கு முன்னர் சட்டபூர்வமான பிணை வழங்குவது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசு பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி, நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 12ம் திகதி ஆரம்பித்திருந்தனர்.
இதனையடுத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ம் திகதிக்கு முன்னர் நிரந்தரத் தீர்வு பெற்றுத் தரப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் உறுதியளித்திருந்தார். அதேவேளை, இந்த உறுதிமொழியை சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹண புஷ்பகுமாரவுக்கு எழுத்துமூலம் ஜனாதிபதி வழங்கியிருந்தார்.
ஜனாதிபதியின் உறுதிமொழியை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் கடந்த 17ம் திகதி தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்துத் தெளிவுபடுத்தி அறிவித்ததையடுத்து தமது உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தனர்.
மேற்படி உறுதிமொழிக்கு அமைவாக நவம்பர் 7ம் திகதிக்கு முன்னர் தமது விடுதலை விவகாரம் குறித்து நிரந்தரத் தீர்வு எட்டப்படாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் அரசியல் கைதிகள் எழுத்து மூலம் அறிவித்தும் இருந்தனர்.
இந்நிலையிலேயே, தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்க முடியாது என்றும், நீண்ட காலம் தடுப்பிலுள்ள கைதிகளுக்கு சட்டபூர்வமான பிணை வழங்குவது என்றும் பிரதமர் தலைமையில் நேற்று முன்தினம் அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் இந்த அரசு பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்றும், இல்லையேல் தமிழ் அரசியல் கைதிகளுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் போராட்டத்தில் குதிக்கும் என்றும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. அரசுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.