சென்னையில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு
இலங்கையில் புதிய அரசு பதவியேற்றுள்ள தால் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் என சென்னையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கவிக்கோ அப்துல் ரகுமானின் பவள விழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம் சென்னை சென்றுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், சென்னையில் நடக்கும் விழாவில் கலந்து கொள்ள வந்துள்ளேன். இலங்கை - இந்தியா அரசு இடையே நல்ல சுமுகமான உறவு உள்ளது. தொடர்ந்து அது நல்ல முறையில் நீடிக்க வேண்டும் என்று இருநாட்டு அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் இருநாட்டு மீனவர்களின்
பிரச்சினை சுமுகமான முறையில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. மிக விரைவில் இதற்கு நல்ல தீர்வு ஏற்படும்.
தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட இடங்களை மீண்டும் தமிழர்களுக்கே திருப்பித்தர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசு உறுதியாக உள்ளது. தற்போது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள அந்த இடங்கள் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இலங்கையில் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவர் ஆகி உள்ளார். இது ஆரோக்கியமான அரசியல் அவருடன் கலந்து பேசி பறிக்கப்பட்ட வாழ்விடங்கள் திருப்பி ஒப்படைக்கப்படும்.
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கையில் மீன்பிடித்தால் அவர்களை கைது செய்வதோடு ரூ. 15 கோடி அபராதம் விதிக்கப்படும் என்று இலங்கை அதிகாரி பேசியதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
இந்த விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இலங்கை அரசு பார்த்துக் கொள்ளும். இலங்கை போர் குறித்து நடக்கும் உள்நாட்டு விசாரணையில் போர்க்குற்றம் நடந்திருப்பதாக விசார ணைக்குழு அறிக்கை சமர்பித்துள்ளது. இதில் இலங்கை அரசு உறுதியாக நடவடிக்கை மேற்கொள்ளும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
போர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணப்படும். இரு நாட்டுக்கும் இடையிலான நல்லுறவு பாதுகாக்கப்படும் வகையில் நடவடிக்கைகள் இருக்கும் இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் கூறினார்.