இன நல்லிணக்கத்தை அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்பும் செயற்திட்டம்
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நாடளாவிய 25 மாவட்டங்களிலும் நல்லிணக்க மையங்களை ஏற்படுத்தி செயற்படவுள்ளதாக தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.
இனப்பிரச்சினை தொடர்பான விவகாரங்கள் உயர் மட்டத்திலும் அரசியல் ரீதியாகவும் கையாளப்படுகின்ற நிலையில் கீழ் மட்ட மக்கள் மத்தியில் இது தொடர்பில் தெளிவூட்டவும் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதும் இந்த மையத்தினூடாக மேற்கொள்ளப்படுமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் துணைச் செயலாளர் தம்மைச் சந்தித்த போதும் இது விடயமாக அவருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்திய அமைச்சர், இனப்பிரச்சினையில் கடந்த காலங்களில் அரசியல் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் அதனையொட்டிய ஒப்பந்தங்கள் அடி மட்ட மக்களை சென்றடையவில்லை. இதனால்தான் அம்முயற்சிகள் தோல்வி கண்டன. இம்முறை அத்தவறை விடாமல் சகல தரப்பினரையும் சம்பந்தப்படுத்துவதே எமது நோக்கமாகும்.
கடந்த 2002 ஆம் ஆண்டில் புலிகளுடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வி கண்டதற்கும் இதுவே காணம்.
யுத்த குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கைக்கிணங்க உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது. இதில் சாதாரண மக்களின் உணர்வுக்கு முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும்.
இனப்பிரச்சினை தொடர்பில் சாதாரண மக்களின் கருத்துக்களும் பெறப்படுவது முக்கியம். அதற்கு வசதியாகவே மாவட்டங்கள் தோறும் நல்லிணக்க கலந்துரையாடல் மையங்கள் அமைக் கப்படவுள்ளன.
மாவட்ட மட்டத்தில் பொது அமைப்புகள், மகளிர் அமைப்புகள், காணமற்போனோர் தொடர்பான அமைப்புக்கள், முன்னாள் போராளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள், யுத்த காலத்தில் விதவையான பெண்கள் தொடர்பான அமைப்புக்கள் என பலதரப்பட்டவர்களை சம்பந்தப்படுத்திக் கொண்டு இந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.