23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

ஐ.நா. தீர்மானத்தை நிராகரிக்க முடியாது! அரசியலமைப்புக்கு அமைவாகவே விசாரணை! சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி

manadu maithiri 006ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நிராகரிக்க முடியாது எனவும், இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைவாக விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்தார்.

 ஐ.நா. தீர்மானம் தொடர்பில் சர்வகட்சிகளினதும் கருத்துக்களைக் கேட்டறிந்துகொள்வதற்காக ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற சர்வகட்சி
கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மூலமாக இலங்கை விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தற்போதுள்ள நிலையில் நாட்டில் தனிப்பட்ட கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. நாங்கள் விமர்சனங்களை வரவேற்கின்றோம்.

ஐ.நா. தீர்மானம் தொடர்பில் அரசு என்ற ரீதியிலும், இலங்கையின் பிரதான கட்சி என்ற ரீதியிலும் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் எம்மால் இயன்றதை இயலுமானவரை செய்ய வேண்டும் என எண்ணுகின்றேன்.

அவற்றை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் சர்வகட்சிகளினதும் ஆலோசனைக்கு அமையவே முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம். சில அரசியல்வாதிகள் நாங்கள் ஐ.நா. தீர்மானத்தை முற்றுமுழுதாகப் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

அத்துடன் சில ஊடகங்களும் இந்தக் கருத்தை முன்வைக்கின்றன. எனினும், ஐ. நா.தீர்மானத்தை நாம் புறக்கணிப்பதால் மாத்திரம் இப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே, எமது அரசிலமைப்புக்கு அமைய இவ்விடயம் தொடர்பில் நாம் ஆராயவேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயத்தில் ஏற்கனவே 2011 மார்ச் 22, 2013 மார்ச் 21, 2014 மார்ச் 27 காலப்பகுதிகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எனினும், இவற்றுக்கும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. அதனை நாங்கள் கருத்தில்கொண்டு ஐ.நா. அறிக்கையில் மிகப் பிரதானமாக குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

ஐ.நா. பரிந்துரைகளில் பிராதானமாக இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லாட்சிக்கான கட்டமைப்புக்களை வலுப்படுத்தல், ஊழல் மோசடி தொடர்பில் விழிப்புணர்வு, வடக்கு, கிழக்கில் சிவில் பாதுகாப்பையும், அபிவிருத்தியையும் கட்டியெழுப்பல்,

கண்ணிவெடிகளை அகற்றல், மீள்குடியேற்றம், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்தல் - மதிப்பளித்தல், பலவந்த ஆட்கடத்தல்களை நிறுத்தல் ஆகியவற்றுடன்,இ

லங்கை அரசினால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் குறிப்பிட்ட விடயங்களான உண்மையைத் கண்டறிதல் மற்றும் காணாமல்போனவர்கள் தேடுதல் தொடர்பில் செயலகம் நிறுவுதல்,

இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் அடங்கிய சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோசனைகளை அமுல்படுத்த வேண்டும்.

ஆகவே, ஐ.நா. தீர்மானத்தை நிராகரிக்காது எவ்வாறு முகம்கொடுப்பது என்பது தொடர்பில் நாங்கள் கலந்தாலோசிப்போம்.

சர்வகட்சிகளின் ஆலோசனைக்கு அமைய எவ்வாறு இதனை முன்னெடுப்பது என்பது தொடர்பில் இறுதி முடிவை எடுப்போம். இது எமது முதல் சந்திப்பே. இன்னும் பல சந்திப்புக்களை நாங்கள் ஏற்பாடு செய்வோம்.

கட்சிகளின் ஆலோசனைக்கு அமைய வேண்டுமானால் உபகுழுக்களை அமைத்து ஆராயவும் முடியும். இது எனது யோசனை மாத்திரமே.

கட்சியின் தனிப்பட்ட கருத்துக்களை இரண்டுவாரத்துக்கு முன்னர் எழுத்து மூலம் எமக்கு அனுப்பி வைக்கலாம்.

நாம் எதனை முன்னெடுத்தாலும் அது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாரே முன்னெடுப்போம். அரசியலமைப்புக்கு அமைவாக முன்னெடுக்க முடியுமானவற்றை நாங்கள் முன்னெடுப்போம் என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 கட்சிகள் கலந்துகொண்டதுடன், திஸ்ஸ விதாரணவின் இடதுசாரி கட்சி மற்றும் சரத் பொன்சேகாவின் ஜனாநாயக கட்சி ஆகியனவும் கலந்தகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.